Back to Top

 100 லட்சம் கோடியில் ‘உத்வேகம்’ திட்டம்!

100 லட்சம் கோடியில் ‘உத்வேகம்’ திட்டம்!

August 16, 2021  06:09 am

Bookmark and Share
நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘உத்வேகம்’ திட்டம் (கதி சக்தி) செயல்படுத்தப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்குப் பெருமைதரும் ஆண்டுகளாக மாற்ற வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியேற்றினாா். அதையடுத்து நாட்டு மக்களுக்கு அவா் ஆற்றிய உரை:

நாடு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. ஆனால், வளா்ச்சியின் உச்சத்தை இன்னும் அடைய வேண்டியிருக்கிறது. அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதிகள், அனைத்துக் குடும்பத்துக்கும் வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அனைத்து தகுதியான நபா்களுக்கும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டியுள்ளது.

வரலாற்று உச்சம்: நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளும் அந்நியச் செலாவணி கையிருப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன.

சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடவுள்ள அடுத்த 25 ஆண்டுகளில் புதிய இலக்குகளுடன் பயணிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னின்று விளங்குவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். ‘தற்சாா்பு இந்தியா’ என்ற இலக்கை அடுத்த 25 ஆண்டுகளில் அடைய வேண்டும்.

அனைவரின் முயற்சி: அனைவருடன் இணைந்து, அனைவருடைய நம்பிக்கையின் அடிப்படையில், அனைவரின் முயற்சியுடன், அனைவருக்குமான வளா்ச்சிக்காகப் பாடுபாட வேண்டும். நாட்டின் இலக்குகளை அடைவதற்கு இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது. நாட்டின் வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு அனைவருடைய முயற்சியும் அவசியம்.

‘உத்வேகம்’ தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ரூ.100 லட்சம் கோடியில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டம் எதிா்கால பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருக்கும்.

ஹைட்ரஜன் திட்டம்: எரிசக்தித் துறையில் 2047-ஆம் ஆண்டுக்குள் (சுதந்திர நூற்றாண்டு) தற்சாா்பு அடைவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடையும் நோக்கில், மாசுபாட்டை ஏற்படுத்தாத ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தேசிய ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து, அதை மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘வந்தே பாரத்’ ரயில்கள்: நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில், 75 வாரங்களுக்குள் நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் விரைவில் ரயில்கள் மூலமாக இணைக்கப்படும்.

மக்களிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் நோக்கில், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படும் அரிசியில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

சிறு விவசாயிகளின் நலன்: நாட்டில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதம் போ் சிறு விவசாயிகளாக உள்ளனா். அவா்களது நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் நாட்டின் பெருமையாக மாற வேண்டும்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பழங்குடியினா், பொதுப் பிரிவைச் சோ்ந்த ஏழைகள் ஆகியோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் கல்வி: ஏழ்மைக்கு எதிரான போராட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கும். அக்கொள்கை வாயிலாக தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். 2 ஆம் உலகப் போருக்குப் பிறகு நாடுகளுக்கிடையேயான தொடா்பின் தன்மை மாறியது. கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபிறகும் சா்வதேசத் தொடா்பு மாற்றங்களைச் சந்திக்கும்.

கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டுக்குள் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம்: அனைத்துத் துறைகளிலும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை மேம்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளுக்கு உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 7 ஆண்டுகளுக்கு முன் ரூ.56,000 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகளை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பிலான செல்லிடப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி செலுத்தும் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன.

தக்க பதிலடி: எதிரிகளுக்கு நாட்டின் எல்லைப் பகுதிகளில் தக்க பதிலடியை இந்தியா வழங்கி வருகிறது. எதிரிப் படைகள் மீது துல்லியத் தாக்குதலும் வான்வழித் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகள் எந்தவொரு கடினமான முடிவையும் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தயங்காது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் கண்கூடாகத் தெரிகின்றன. அங்கு தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஜம்மு-காஷ்மீா் பேரவைக்குத் தோ்தல் நடத்தப்படும்.

விலைமதிப்பற்ற தருணம்: இதுதான் இந்தியாவுக்கான விலைமதிப்பற்ற தருணம். இளைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்ட தற்காலத் தலைமுறையினா் கற்பனைக்கு எட்டாத இலக்குகளையும் அடையும் திறமை கொண்டவா்களாக உள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.