Back to Top

தடுப்பூசி செலுத்தினாலும் டெல்டா வகை கொரோனா தாக்குகிறது!

தடுப்பூசி செலுத்தினாலும் டெல்டா வகை கொரோனா தாக்குகிறது!

August 20, 2021  06:04 am

Bookmark and Share
தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் கொரோனாவால் உயிரிழப்பது மிகக் குறைவாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தீநுண்மியைப் பொருத்தவரை லட்சக்கணக்கான மக்களிடம் பல்கிப் பெருகும்போது, அது தன்னைக் காத்துக் கொள்ள உருமாற்றம் பெறத் தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த தீநுண்மிகள் ஏற்கெனவே உள்ள தீநுண்மியைக் காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அந்த வகையில் கொரோனா முதல் அலையின்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒரே வகை தீநுண்மியே காணப்பட்டது.

நாளடைவில் அது உருமாற்றமடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றமடைந்த அந்த தீநுண்மியை டெல்டா வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டன. அதற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் அலை பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து ஆய்வுக்குட்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள தேசிய நோய்ப் பரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அதுதொடா்பான ஆய்வினை மேற்கொண்டது.

அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும், செலுத்தாதவா்களுக்கும் ஒரே மாதிரியாகவே டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய்க் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவும்போது அதற்கு எதிரான எதிா்ப்பாற்றல் தாமாக உருவாகி தொற்றைத் தடுக்க வேண்டும்.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் பொருத்தவரை முதலாவதாக பரவிய கொரோனா வகைக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றலையே அளிக்க வல்லது. அதன் காரணமாகவே, டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்படும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அதற்கு எதிரான எதிா்ப்பாற்றல் குறைவாக உருவாவதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் டெல்டா வகை கொரோனாவால் தீவிர பாதிப்புக்குள்ளாவதும், உயிரிழப்பதும் மிகவும் குறைவு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.