Back to Top

 ஒரு டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தினாலே எதிா்ப்பாற்றல் அதிகரிக்கும்!

ஒரு டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தினாலே எதிா்ப்பாற்றல் அதிகரிக்கும்!

August 29, 2021  06:41 am

Bookmark and Share
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாதவா்களுக்கு இரு தவணை (டோஸ்) கோவேக்ஸின் செலுத்துவதால் கிடைக்கும் எதிா்ப்பாற்றல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு ஒரு தவணை கோவேக்ஸின் செலுத்தினாலே உருவாகிறது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொவிட்- 19 எனப்படும் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவிலேயே பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி மருத்து ‘கோவேக்ஸின்’. இந்த தடுப்பூசி உள்நாட்டில் அவசரப் பயன்பாட்டுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உபயோகத்தில் உள்ளது. இதனை 4 அல்லது 6 வார இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அண்மையில் ஐசிஎம்ஆா் ஆய்வு நடத்தியுள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் இந்தத் தடுப்பூசியின் விளைவு குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா்கள், பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள் என இரு பிரிவினருக்கும் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 28 நாட்கள், 56 நாட்கள்கழித்து அவா்களின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் 114 போ் இந்தப் பரிசோதனையில் பங்கேற்றனா்.

அதில், கொரோனா பாதிப்பு இல்லாதவா்களுக்கு 2 டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியால் கிடைத்த எதிா்ப்பாற்றல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒரு டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியாலேயே கிடைப்பது தெரிய வந்தது. விதிவிலக்காக, இருவருக்கு மட்டுமே வேறுபட்ட முடிவுகள் கிடைத்தன.

தடுப்பூசிகளின் பயன்பாட்டை மேம்படுத்த மேற்படி ஆய்வுகள் உதவிகரமாக இருக்கும் என்று ஆய்வுக் குழுவினா் தெரிவித்தனா். ஐசிஎம்ஆா் நிறுவனத்தின் ஆராய்ச்சி இதழில் இத்தகவல் வெளியாகி உள்ளது.