Back to Top

இவ்வளவு தற்கொலைகளா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இவ்வளவு தற்கொலைகளா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

September 18, 2021  07:38 am

Bookmark and Share
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கேயே பயிரிடப்பட்ட காய்கறிகளை பார்வையிட்டு, இதுப்போல் காய்கறி உற்பத்தி, இம்மருத்துவமனையில் குணமடைந்த தோழர்களை வைத்து செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் ரிவைவ் அடுமனையை திறந்து வைத்தார். சமூகநீதி நாள் உறுதிமொழி மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு மாதம் உறுதிமொழி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எடுக்கப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இம்மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள். அப்படி சிகிச்சைப் பெற்று செல்பவர்களில் 100 பேர் குணமடைந்தும், தங்களது குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளாமல், புறந்தள்ளிவிடுகிற சூழ்நிலையில் இருக்கின்றனர். வேளாண்மை துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறைகள் இணைந்து காலியாக இருக்கிற இடங்களில் காய்கறிகளைப் பயிரிடுகிற பணிகளை இங்கு சிகிச்சை பெற்று குணமடையது இருப்பவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இந்த வளமான நிலத்தை பதப்படுத்தி இங்கு சிறப்பாக விளையதிருக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு, பலவகையான வாழை, வெண்டை, கத்தரி போன்ற காய்கறிகளை விளைவித்து, அவற்றையெல்லாம் சென்னையில் இருக்கிற அரசு ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளுக்கு உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த நிலங்களில் அவரவர் உடல் நலத்திற்கேற்ப தங்களது உடலுழைப்பை செலுத்துகிற தோழர்களுக்கு கூலி வழங்கப்பட்டு அவை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உள்ளது. விபத்துக்களினால் இறப்பவர்களைவிட தற்கொலையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டாலே, தொடர்யது ஒன்று, இரண்டு, மூன்று முறை தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்று சாவின் விளிம்புக்குச் சென்றுவிடுகிறார்கள்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் என்ன காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அதற்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பாலிடாயில், எலிமருந்து, சாணிபவுடர் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அண்மையில் நான் திருமங்கலம் மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு இந்த சாணி பவுடரைச் சாப்பிட்டுத்தான் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் வீட்டில் மாட்டு சாணத்தை பூசுவது என்பது சுபகாரிய விசயமாகக் கருதப்பட்டது. விஷக் கிருமிகள் வீட்டிற்குள் அண்டாமல் இருக்க சாணி பூசுவது என்பது செய்யப்பட்டது. அதுவும் கூட இப்போது விஷம் கலந்து, விஷப் பவுடராக மாற்றி, வணிகநோக்கத்தோடு செயல்படுகின்றனர். இந்த சாணிப் பவுடரில் விஷத்தின் அளவு கூடுதலாக இருப்பதால், அதைச் சாப்பிடுபவர்களை காப்பாற்றவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

எனவே ஒரு பண்பாட்டிற்கு எதிராக, ஒரு கலாச்சாரத்திற்கு எதிராக, சாணிக்கு பதிலாக சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மிக விரைவில் சாணிப் பவுடர் தமிழகத்தில் தயாரிப்பதற்கு தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாலிடாயில், எலி மருந்துகளை பாதுகாப்பானப் பெட்டகங்களை வைத்து விற்க வேண்டும். அவற்றை வெளிப்படையாக தெரிகிற வகையில் விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கும், அதேப்போல் பாலிடாயில், எலி மருந்துகளை வாங்க வருபவர்கள் தனியாக வருபவர்களுக்கு வழங்கக்கூடாது. 2 அல்லது மூன்று பேர் சேர்யது வந்து கேட்டால் மட்டுமே பாலிடாயில், எலி மருந்துகளை வழங்க வேண்டுமென்று வணிகர்களுக்கு அதை வலியுறுத்தி, மருத்துவ துறையின் அலுவலர்கள் மூலம் அரசு ஆணைப் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் தற்கொலை செய்கிற எண்ணத்தை மாற்றவும், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.