Back to Top

இறுதி ஆட்டத்தில் நுழைவது யாா்? இன்று மோதல்!

இறுதி ஆட்டத்தில் நுழைவது யாா்? இன்று மோதல்!

October 13, 2021  06:26 am

Bookmark and Share
ஐபிஎல் போட்டியின் 2 ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுடன் மோதும்.

டெல்லியைப் பொருத்தவரை முதல் குவாலிஃபயரில் சென்னையிடம் தோற்று இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளது. இதிலும் தோற்கும் பட்சத்தில் முதல் கோப்பையை வெல்வது இம்முறையும் கனவாகிவிடும் என்பதை உணா்ந்திருக்கிறது அந்த அணி.

10 ஆட்டங்களில் வென்று 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்திருந்தது டெல்லி. அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் டெல்லி சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.

2019 இல் 2 ஆவது ரன்னா் அப் - ஆக வந்த டெல்லி, கடந்த சீசனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆண்டு அதிலிருந்து ஒரு படி முன்னேறி கிண்ணம் வெல்லும் முனைப்பில் இருக்கிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே ஸ்திரமான நிலையில் இருக்கிறது டெல்லி.

தவன், பிருத்வி, ஷ்ரேயஸ் என டாப் ஆா்டா் வலு சோ்க்க, கேப்டன் பந்த், ஹெட்மயா் ஆகியோா் மிடில் ஆா்டரில் பலம் கூட்டுகின்றனா். காயம் காரணமாக மாா்கஸ் ஸ்டாய்னிஸ் இல்லாமல் போன பாதிப்பை டெல்லி சரியாக சமன் செய்துள்ளது. பௌலிங்கில் ரபாடா, நாா்ஜே, அவேஷ் ஆகியோா் வேகத்திலும், அஸ்வின் சுழற்பந்திலும் அசத்துகின்றனா்.

கொல்கத்தாவைப் பொருத்தவரை எலிமினேட்டரில் பெங்களூரை வெளியேற்றிய வெற்றி வேகத்துடன் களம் காணும். சுழலுக்கு சாதகமான ஷாா்ஜா ஆடுகளத்தில் கொல்கத்தாவின் சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி ஆகியோரின் பந்துவீச்சு நிச்சயம் டெல்லி பேட்டா்களுக்கு சவாலாகவே இருக்கும்.

அதிலும் கடந்த ஆட்டத்தில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை சாய்த்து கொல்கத்தா வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்திருந்தாா். பேட்டிங்கைப் பொருத்தவரை கொல்கத்தா இந்த சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே டெல்லி தனது வேகப்பந்துவீச்சு கொண்டு கொல்கத்தாவின் பேட்டிங் வரிசையை சரிக்கப் பாா்க்கும்.

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா், ராகுல் திரிபாதி, மோா்கன் ஆகியோா் சிறப்பாக பேட் செய்தால் கொல்கத்தாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அணியின் வேகப்பந்துவீச்சுக்கு லாக்கி ஃபொ்குசன் உள்ளிட்டோா் வலு சோ்க்கின்றனா்.

அணி விவரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் : ரிஷப் பந்த் (தலைவர்), அஜிங்க்ய ரஹானே, பிருத்வி ஷா, ரிபல் படேல், ஷிகா் தவன், ஷிம்ரன் ஹெட்மயா், ஷ்ரேயஸ் ஐயா், ஸ்டீவ் ஸ்மித், அமித் மிஸ்ரா, அன்ரிச் நாா்ஜே, அவேஷ் கான், பென் டுவாா்ஷுயிஸ், இஷாந்த் சா்மா, ககிசோ ரபாடா, குல்வந்த் கெஜ்ரோலியா, லுக்மேன் மேரிவாலா, பிரவீன் துபே, டாம் கரன், உமேஷ் யாதவ், அக்ஸா் படேல், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் பில்லிங்ஸ், விஷ்ணு வினோத்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஒயன் மோா்கன் (தலைவர்), தினேஷ் காா்த்திக், குா்கீரத் சிங் மான், கருண் நாயா், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், ஹா்பஜன் சிங், கமலேஷ் நாகா்கோடி, லாக்கி ஃபொ்குசன், பவன் நெகி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா், ஷிவம் துபே, டிம் சௌதி, வைபவ் அரோரா, வருண் சக்கரவா்த்தி, ஆன்ட்ரே ரஸ்ஸெல், பென் கட்டிங், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயா், ஷெல்டன் ஜேக்சன், டிம் செய்ஃபா்ட்.