Back to Top

முதுமுதலிகே புஷ்பகுமாரவும் Jaffna Kings அணியின் பயிற்றுவிப்பாளர் குழாத்துடன் இணைவு

முதுமுதலிகே புஷ்பகுமாரவும் Jaffna Kings அணியின் பயிற்றுவிப்பாளர் குழாத்துடன் இணைவு

November 24, 2021  11:50 am

Bookmark and Share
குவைட் இராச்சியத்தின் பிரதான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும், குவைட் கிரிக்கெட் அபிவிருத்தி முகாமையாளராகவும் செயலாற்றி வருகின்ற இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய முதுமுதலிகே புஷ்பகுமார Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சஜித் பத்திரண 19 வயதுக்குற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறு புதிய சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஒருவர் Jaffna Kings அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முதுமுதலிகே புஷ்பகுமார 2019 ஆம் ஆண்டிலிருந்து குவைட் இராச்சியத்தின் பிரதான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராகவும், குவைட் கிரிக்கெட் அபிவிருத்தி முகாமையாளராகவும் பணியாற்றி வருவதுடன் அவரது பயிற்றுவிப்பின் கீழ் குவைட் தேசிய கிரிக்கெட் அணி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

குவைட் தேசிய அணி ஆசிய கிண்ணத்திற்காக தகுதிபெற்றமை முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஆசிய கிண்ண மேற்கு வலய தொடரில் இரண்டாம் இடத்தினை குவைட் அணி வெற்றிக் கொள்வதற்கும் முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பே பெரிதும் பங்களிப்பு செய்தது எனலாம்.

மேலும், கோல்ட்ஸ் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக புஷ்பகுமார 09 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அது Jaffna Kings அணிக்கு பெரிதும் பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

விசேடமாக சர்வதேச கிரிக்கெட் கவூன்சிலின் தரப்படுத்தல்களுக்கு அமைவாக உலகின் முதலாம் நிலை 20/20 பந்துவீச்சாளராக பெயரிடப்பட்டுள்ள வனிந்து ஹசரங்க உட்பட Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு படையணியானது முதுமுதலிகே புஷ்பகுமாரவின் விசேட பயிற்றுவிப்பின் கீழ் இம்முறை LPL தொடரில் தமது எதிரணியினருக்கு பலத்த அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான முதுமுதலிகே புஷ்பகுமார 1999ம் ஆண்டில் சகல துறைகளிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி சிறந்த பாடசாலை வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோன்று 1998ம் ஆண்டில் இடம்பெற்ற 17 வயதுக்குற்பட்ட சிங்கர் கிண்ணத் தொடரிலும், பிர்ன்ஸ் ஓப் வேல்ஸ் கிண்ணத் தொடரிலும் மிகச் சிறந்த வீரராகவும் முதுமுதலிகே புஷ்பகுமார பாராட்டப்பட்டார்.

Jaffna Kings உரிமம் பற்றி.....

Jaffna Kings என்பது லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பங்கேற்கும் ஒரு உரிமம் கொண்ட கிரிக்கெட் அணியாகும். அவ்வணியின் உரிமையாளராக இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் தொழிலதிபரான அல்லிராஜா சுபாஸ்கரன் திகழ்கின்றார். இவர் லைகா குழும நிறுவனங்களின் நிறுவுனரும் தலைவருமாவார். லைகா குழுமமானது ஒரு பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமாகும். இது தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பயணம் மற்றும் சுற்றுலா, உடல்நலம், ஊடகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த குழுமமானது, இந்தியாவிலும் இலங்கையிலும் வலுவான முன்னிலையுடன் தெற்காசிய பிராந்தியத்தில் தனது வணிகங்களை பல்வகைப்படுத்தி வருகிறது.