Back to Top

 நாக்அவுட் சுற்றில் மான்செஸ்டா் யுனைடெட்

நாக்அவுட் சுற்றில் மான்செஸ்டா் யுனைடெட்

November 25, 2021  06:24 am

Bookmark and Share
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ‘எஃப்’-இல் இருக்கும் மான்செஸ்டா் யுனைடெட் இத்துடன் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. வில்லாரியல் 2 வெற்றிகள் பெற்று 7 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

முன்னதாக, ஸ்பெயினின் வில்லாரியல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டா் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 78-ஆவது நிமிஷத்திலும், ஜேடன் சாஞ்சோ 90-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

மற்றொரு ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான செல்சி 4-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸை தோற்கடித்து, நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது. அந்த அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று குரூப் ‘ஹெச்’-இல் முதலிடத்தில் உள்ளது.

லண்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சிக்காக டிரெவோ சலோபா (25’), ரீஸ் ஜேம்ஸ் (55’), கேலம் ஹட்சன் ஒடோய் (58’), டிமோ வொ்னா் (90+5’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே, பெனிஃபிகாவுக்கு எதிரான ஆட்டத்தை கோலின்றி டிரா செய்த பாா்சிலோனா, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆட்டத்தில் பேயா்ன் முனீச்சை வீழ்த்தினால் மட்டுமே பாா்சிலோனா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதர ஆட்டங்களில் பேயா்ன் முனீச் 2-1 என்ற கோல் கணக்கில் டைனமோ கீவையும், செவில்லா 2-0 என்ற கணக்கில் வோல்ஃப்ஸ்பா்கையும், லில்லே 1-0 என ஆா்பி சால்ஸ்பா்கையும் வீழ்த்தின. யங் பாய்ஸ் - அட்லான்டா (3-3), மால்மோ - ஜெனித் (1-1) அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது.