Back to Top

Women in Management, IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்களுக்கு கௌரவிப்பு

Women in Management, IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்களுக்கு கௌரவிப்பு

January 19, 2022  05:33 pm

Bookmark and Share
Women in Management (WIM) இனால் IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆகியன இணைந்து சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது இலங்கை மற்றும் மாலைதீவுகளில் தமது துறைகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

11ஆவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது விருந்தோம்பல், வங்கி மற்றும் நிதியியல், சரக்குக் கையாளல் மற்றும் விநியோக சங்கிலிகள், தொழில்முயற்சியாண்மை, ஊடகம் மற்றும் சட்டம் போன்றவற்றுடன், தாம் தெரிவு செய்த தொழில்நிலைகளில் அல்லது தமது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஊக்குவிப்பாக திகழ்ந்தமைக்காக கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கலின் போது, பணியிடங்களில் பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு வலுவூட்டல் வழங்கியிருந்த இலங்கையின் நிறுவனங்களின் செயற்பாடுகளும் பாராட்டப்பட்டிருந்தன.

இந்த விருதுகள் வழங்கலின் போது உயர்ந்த விருதுகள் வைத்தியர். மஹேஷி ராமசாமி (ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண் நிபுணர்), பேராசிரியர். நதீரா கருணாவீர (ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண்), அருணி குணதிலக (Trail Blazer), ரந்துலா டி சில்வா (ஆண்டின் சிறந்த கேம் சேஞ்ஜர்) மற்றும் கலாநிதி. வஜிரா சித்ரசேன (நடுவர்களின் தெரிவு) போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. விருதுகளின் வெற்றியாளர்கள் பற்றிய முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. Women in Management (WIM) இன் ஸ்தாபகர்/தலைமை அதிகாரி கலாநிதி. சுலோச்சனா செகேரா கருத்துத் தெரிவிக்கையில், “மீட்சி, ஆர்வ மனப்பாங்கு, கடும் உழைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் கொண்டாட்டமாக 2021 ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்து மூன்றாவது ஆண்டில் நாம் காலடி பதித்துள்ள நிலையில், இன்னல் வேளைகளின் போதும் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைப் பற்றி இந்த ஆண்டின்

வெற்றியாளர்கள் எமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளனர். சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த பெண்கள் கொண்டிருக்கும் ஆற்றல்களைப் பற்றியும் இவர்கள் எமக்கு நினைவூட்டியுள்ளனர். வெளிப்படையில் தமது நிலையை பெற்றுக் கொள்வதில் பெண்கள் பின்நின்றாலும், கடந்த தசாப்த காலப்பகுதியில் சிறந்த 50 பெண் நிபுணர்கள் விருதுகளினூடாக, அவர்களுக்கு தமது திறமைகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்ததுடன், ஏனையவர்கள் மத்தியில் ஆர்வமனப்பாங்களை தோற்றுவிக்கக்கூடியவர்களாகவும் அமைந்திருந்தனர்.” என்றார்.

கடந்த காலங்களில் 470க்கும் அதிகமான வெற்றியாளர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் நிலைபேறான மற்றும் உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சியில் தலைவர்களாக, ஊழியர்களாக, தொழில் முயற்சியாளர்களாக மற்றும் பங்காளர்களாக ஆற்றும் பங்களிப்புகளை கௌரவித்து வெளிக் கொணரும் வகையில் சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வை இணைந்து முன்னெடுப்பதில் IFC ஏழாவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IFC இன் இடைக்கால முகாமையாளர் விக்டர் அந்தனிபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்கள் சிறந்த வகையில் கட்டியெழுப்பப்படுவதற்கு நேர்த்தியான சூழலை கட்டியெழுப்ப வேண்டும். IFC- DFAT Women in Work நிகழ்ச்சியினூடாக ஆதரவளிக்கப்பட்டிருந்த இந்த ஆண்டின் சிறந்த 50 விருதுகள் வழங்கலினூடாக தொற்றுப் பரவல் மத்தியில் இலங்கையின் பெண்களின் மீட்சியான தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.” என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் சிறந்த 50 விருதுகள் வழங்கல் என்பதனூடாக, வியாபாரத்திலுள்ள பெண்கள் தமது சக்தியினூடாக தலைமைத்துவத்திலுள்ளவர்களையும் மற்றும் சமூகத்திலுள்ளவர்களினதும் கவனத்தை ஈர்த்து முன்மாதிரியாக திகழ்ந்திருந்தனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் காலப்பகுதியில் 2022 விருதுகள் வழங்கலினூடாக இலங்கை பெண்களின் மீண்டெழுந்தன்மைக்கு கௌரவிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 க்கு டயலொக் அனுசரணை வழங்கியிருந்ததுடன், தங்க அனுசரணையாளர்களாக Salota International மற்றும் சிங்கர் இணைந்திருந்தன. வெள்ளி அனுசரணையாளர்களாக லங்கா ஐஓசி, யுனிலீவர், விஷன் கெயார் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியன இணைந்திருந்தன. நிகழ்வின் அனுசரணையாளர்களாக மலிபன் மற்றும் சம்பத் வங்கி ஆகியனவும் இணைந்திருந்தன. நிகழ்வின் அன்பளிப்புப் பங்காளராக New Vivya கைகோர்த்திருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சட்டப்பிரிவின் தலைமை அதிகாரியும், செயலாளர் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், 2021 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கலுக்கான நடுவர் குழுவின் தலைவருமான நதீஜா தம்பையா விருதுகளின் வெற்றியாளர்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்த பெண்களின் தரம் உண்மையில் உயர்வானதாக அமைந்திருந்தது. இந்தப் பெண்களின் தொழில்நிலைகளில் அவர்கள் அடைந்திருந்த சாதனைகளை மாத்திரம் கவனம் செலுத்தாமல், தொழிற்துறையில் அவர்களின் தாக்கம் மற்றும் தமது நிறுவனங்களில் ஏனைய பெண்களுக்காக எவ்வாறான பங்களிப்புகளை வழங்கியிருந்தனர் என்பது பற்றியும் கவனம் செலுத்துமாறு தூண்டப்பட்டிருந்தோம்.” என்றார்.

இந்த ஆண்டின் நடுவர் குழுவின் தலைவராக நதீஜா தம்பையா இயங்கியதுடன், குழுவில் Hayleys Agriculture Holdings Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன, Dreamron Group of Companies குழும முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிஷு கோமஸ், Daily FT பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிஸ்தார் கசிம், Clootrack இலங்கை/மாலைதீவுகள் மற்றும் பாகிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹாந்த அதுகோரல, Dialog Axiata PLC இன் குழு பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சான்ட்ரா டி சொய்ஸா, தந்திரோபாய சந்தைப்படுத்தல் நிபுணர் சந்தியா சல்காடோ, KL.LK பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தோஷ் மேனன், இலங்கைக்கான இடைக்கால அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அமன்டா ஜுவெல் மற்றும் IFC இன் Women in Work இல் நிகழ்ச்சி முகாமையாளர் சாரா ட்விக் ஆகியோர் அடங்கியிருந்தனர்.