
Siam City Cement குழுமம் மற்றும் IUCN ஆகியன SCCC குழுமத்தின் நிலைபேண்தகைமை குறிக்கோள் 2030 க்கு உதவவும் மற்றும் ஆசியாவில் பல்லுயிர் பாதுகாப்புக்காகவும் தமது கூட்டாண்மையைத் தொடர்கின்றன
January 19, 2022 05:48 pm
Siam City Cement குழுமம் (SCCC குழுமம்) மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)
ஆகியன SCCC குழுமம் தொழிற்படுகின்ற தொழிற்சாலைகளில் பல்லுயிர் பெருக்கத்தின் மீது ஏற்படுகின்ற
தாக்கத்தை நிகர அடிப்படையில் நேர்மறையாக்குவதை இலக்காகக் கொண்ட INSEE நிலைபேண்தகைமை
குறிக்கோள் 2030 ஐ செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் அண்மையில் கைச்சாத்திட்ட ஒரு புதிய
புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உத்தியோகபூர்வமாக நீட்டித்துள்ளன.
இக்கூட்டாண்மையின் குறிக்கோள், முடிந்தவரைக்கும் பல்லுயிர் இழப்பைத் தவிர்ப்பதும், குறைப்பதும் ஆகும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தாய்லாந்து, இலங்கை, வியட்நாம் மற்றும் கம்போடியாவில் உள்ள
தொழிற்சாலைகளில் SCCC குழுமத்தின் கல் உடைக்கப்படும் இடங்கள் மற்றும் சீமெந்து உற்பத்தி
செயல்முறைகளின் போது ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத பாதிப்புகளை ஈடுசெய்ய பல்லுயிர் மாற்றங்களை
வடிவமைத்து செயல்படுத்த SCCC குழுமம் மற்றும் IUCN ஆகியன ஒத்துழைக்கும். இதன் மூலமாக
இப்பிராந்தியத்தில் சீமெந்து மற்றும் அதனுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் துறைவாரியான
முன்னேற்றத்திற்கு பங்களிப்புக் கிட்டுகின்றது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள SCCC குழும தலைமையகத்தில் SCCC குழுமத்தின் குழும தலைமை
நிர்வாக அதிகாரியான திரு. எய்டன் லைனம் மற்றும் IUCN ஆசியாவிற்கான பிராந்திய பணிப்பாளரும் மற்றும்
ஓசானியாவுக்கான மைய பணிப்பாளருமான கலாநிதி திரு. டின்டோ கேம்பிலன் ஆகியோரால் இந்த
புரிந்துணர்வு உடன்படிக்கை சைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இலங்கை, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய
நாடுகளில் பிரதிநிதிகள் நிகழ்நிலையாக இணைந்து கொண்டனர்.
திரு. எய்டன் லைனம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “INSEE நிறுவனத்தின் நிலைபேண்தகைமை
குறிக்கோள் 2030 இல் பல்லுயிர் பெருக்கம் முக்கியமான அத்திவாரத் தூண்களில் ஒன்றாக நிறுவப்பட்டுள்ளது.
இது வணிகத் தேவைகளுக்கு ஏற்ப செயல்பாட்டு வடிவம் கொடுக்கக்கூடிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்து,
ஒத்திசையச் செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எனவே பரஸ்பரம் பகிரப்பட்ட நோக்கங்களை
அடைவதற்கான எங்கள் திட்டங்களை இன்னும் சிறப்பாக்குவதற்கு சவால் விடுவதிலும், அதனை முன்னெடுக்க
உதவுவதிலும் IUCN ஒரு உள்ளார்ந்த, ஒருங்கிணைந்த பங்கை வகிக்க முடியும்.
முதலாவது புரிந்துணர்வு உடன்படிக்கையின் (2018-2021) காலத்தில், பல்லுயிர் இழப்பைக் குறைப்பதற்கும்
அதன் செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை புனரமைப்பதற்கும் SCCC குழுமம் IUCN உடன் இணைந்து
பணியாற்றியது. உதாரணத்திற்கு, இலங்கையில், Siam City Cement (Lanka) நிறுவனம் IUCN உடன்
இணைந்து, அருவாக்காட்டில் கல்லுடைப்பு புனரமைப்பின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக வனவிலங்குகளைக்
கண்காணித்தது. உனவடுன கடற்கரையில் உள்ள பவளப்பாறை பெருக்கத் திட்டத்திற்காக IUCN பவள
வல்லுனர்களிடம் தொழில்நுட்ப உதவியை நாடிப் பெற்றுக்கொண்டது, மேலும் கன்னெலிய பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதிக்குள் மீண்டும் காடுகளை வளர்க்கும் திட்டத்தில் IUCN உடன் ஒத்துழைக்க தனியார் துறை
பங்காளராகத் தெரிவு செய்யப்பட்டது. தாய்லாந்தில், Siam City Cement Plc. நாட்டின் முதல் தேசிய வணிகம்
மற்றும் பல்லுயிர் தளமான Bio-Diversity Network Alliance (B-DNA) உடன் இணைந்து, IUCN இன்
ஒருங்கிணைப்புப் பணிகளுடன், வணிக விழிப்புணர்வு மற்றும் நிலைபேண்தகைமைக்கான திறனைக்
கட்டியெமுப்பவும், மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் வலையமைப்பு மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கவும்
உழைத்தது. வியட்நாம் மற்றும் கம்போடியா தொழிற்சாலைகளும் இதேபோன்ற பாரிய அளவில்
நல்விளைவுக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன.
“இந்த தொடர்ச்சியான கூட்டாண்மை மற்றும் குழும நிறுவனத்தின் நிலைபேண்தகைமை குறிக்கோளுடன்
பல்லுயிர் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு SCCC குழுமத்தின் உண்மையான அர்ப்பணிப்பை தெளிவாக
நிரூபிக்கிறது. சமூகம், வணிகம் மற்றும் இயற்கையின் தேவைகளை சமநிலைப்படுத்தும் தீர்வுகளை வழங்கும்
தராதர நிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாம் ஒன்றாக ஸ்தாபிக்க முடியும்,” என்று கலாநிதி டிண்டோ
காம்பிலன் அவர்கள் குறிப்பிட்டார்.