
பிரபல நடிகர் கொலை வழக்கில் சிக்கிய நபர்!
June 20, 2022 08:58 am
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா (வயது 36). கன்னட நடிகரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பட்டனகெரே பகுதியில் வசித்து வந்தார்.
இவரது மனைவி 3 மாதங்களூக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சதீசின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சதீசிடம் தகராறு செய்தனர்.
பின்னர் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சதீஷ் உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சதீஷ் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஆர்.ஆர்.நகர் போலீசார் சம்பவஇடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். சதீசை கொன்றது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. சதீசை அவரது மனைவியின் சகோதரர் கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் சதீசின் மனைவியின் உறவினர்களிடம் ஆர்.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சதீசின் மைத்துனர் சுதர்சன், உறவினர் நாகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனது சகோதரியின் தற்கொலைக்கு சதீஷ்தான் காரணம் என்று சுதர்சன் சந்தேகம் அடைந்தார். மேலும் மனைவி இறந்த பின்பு சதீஷ் அவரது குழந்தையை மனைவியின் குடும்பத்தாரிடம் விட்டு விட்டார். இதுதொடர்பாக சுதர்சனுக்கும், சதீசுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சதீஷ் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நடிகர் சதீஷ் வஜ்ரா ´லகோரி´ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். மேலும் பல்வேறு கன்னட படங்களில் சதீஷ் துணை நடிகராகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.