Back to Top

கொரோனா பாதித்தோரில் 25% பேருக்கு பிஏ-5 வகை தாக்கம்!

கொரோனா பாதித்தோரில் 25% பேருக்கு பிஏ-5 வகை தாக்கம்!

June 22, 2022  09:16 am

Bookmark and Share
தமிழகத்தில் இந்த மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 25 சதவீதம் பேர் ஒமைக்ரான் பிஏ-5 வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

கடந்த மாதத்தில் அந்த விகிதம் வெறும் 4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 34.62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆளாகியுள்ளனர். முதலில் தலைநகர் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், அது படிப்படியாக பரவி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்தது.

அதிலும், நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உருவானது. இதையடுத்து மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டன.

பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட அந்த ஆய்வுகளில் மாநிலம் முழுவதும் 87 சதவீதம் பேருக்கு எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தில் இதுவரை தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் குறிப்பிட்ட சிலரின் சளி மாதிரியை மரபணு பகுப்பாய்வுக்கு பொது சுகாதாரத் துறையினர் அனுப்பினர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பிஏ-2.38 மற்றும் பிஏ-5 வகை ஒமைக்ரான் தாக்கமே அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ண

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

கடந்த மே மாதத்தில் பிஏ-2 வகை தொற்று பாதித்தவர்களின் விகிதம் 36 சதவீதமும், பிஏ-2.38 வகை பாதிப்புக்குள்ளானவர்கள் விகிதம் 35 சதவீதமாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் பிஏ-4, பிஏ-5 ஆகியவை முறையே 1.4 சதவீதம் மற்றும் 4 சதவீத பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன.​

இந்த நிலையில், ஜூன் மாதத்தைப் பொருத்தவரை பிஏ-2.38 வகை தொற்றுக்குள்ளானோர் 35 சதவீதமாகவும், பிஏ-5 வகை பாதிப்புக்குள்ளானோர் 25.2 சதவீதமாகவும் உள்ளது.

பிஏ-5 வகை ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதே தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரக் காரணம் என்பதை உணர முடிகிறது.

அதேவேளையில், தடுப்பூசி நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அதேபோன்று உயிரிழப்புகளும் இல்லை. முகக் கவசம், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்தால் எந்த வகை தொற்று பரவினாலும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.