Back to Top

 சமூக ஒருங்கிணைப்புக்காக இளைஞர்களின் மாற்றம்

சமூக ஒருங்கிணைப்புக்காக இளைஞர்களின் மாற்றம்

June 22, 2022  01:44 pm

Bookmark and Share
சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் (SCORE) இளைஞர் செயற்பாடானது (SYA) 14 மாவட்டங்களைச் சேர்ந்த 280 இளைஞர்களுக்குத் தமது வாழ்க்கையை மாற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடன் சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) மற்றும் Global Communities மூலம் நடைமுறைப்படுத்தப்படும் (SYA) ஆனது, 18 முதல் 29 வயது வரையிலான இளைஞர் யுவதியரின் குடியுரிமை விழிப்புணர்வு, தலைமைத்துவத் திறன்கள், சமூக மேம்பாடுகளில் பங்கேற்றல் மற்றும் தீர்மானமெடுக்கும் செயன்முறைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான 12 மாதகாலத் திட்டமாகும்.

பயிற்சிக்கு முந்தைய துவக்க முகாம்களுக்குப் பின்னர், 280 பயிலுநர்கள் அவரக்ளின் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் 4 மாத காலத்திற்குப் பயிற்சிக்காக அமர்த்தப்பட்டனர். அங்கு அவர்கள் முறையானதும் தீர்க்கமானதுமான வாராந்த நிகழ்ச்சித் திட்டங்களிற்கு உட்படுத்தப்பட்டனர். அதாவது 4 நாட்கள் பணி புரிந்து விட்டுப் பின்னர் பயிற்சியின் சீரான செயற்பாட்டை உறுதி செய்வதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பயிற்சி வழிநடத்துபவர்கள் இருவரின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் முக்கிய கற்றல்களை வெள்ளிக்கிழமை அமர்வுகளில் சமர்ப்பித்தனர். ஆக மொத்தத்தில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது சமூக ஆர்வலர்களாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளை அடையாளம் காணக்கூடிய தனித்துவமான அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தது.

பயிற்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க அடைவுகளில் ஒன்று என்னவெனில், பயிலுநர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதற்கான ஒரு புதிய உற்சாகத்தை உணர்ந்தமையாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயிலுநர் ஒருவர் கூறுகையில், “எனது பயிற்சியைத் தொடர்ந்து, நான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறேன். அதனால்தான் 3டி அனிமேஷன் மற்றும் வெப் டெவலப்மெண்ட் துறைகளைத் தேர்ந்தெடுத்தேன்.அதில் நான் சாதித்தால், என்னால் அடுத்த சந்ததியினருக்கு வழிகாட்டுதல்களை அளிக்க முடியும்.”

சில இளைஞர்கள் தங்கள் தொழிற்துறையில் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு இவ்வனுபவத்தைப் பயன்படுத்தியிருந்தனர். எனது குறிக்கோள்களில் ஒன்று கணக்காளராக வேண்டுமென்பதாகும்.எனவே நான் பயிற்சிக்கான துணை நிறுவனத்தில் ஒரு கணக்காளராகப் பணிபுரிந்தேன். அங்கு பெற்ற பயிற்சி மற்றும் பணி அனுபவத்தின் காரணமாக தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் இளநிலை கணக்காளராகப் பணி புரிகிறேன். ”என்று மாத்தறையைச் சேர்ந்த பயிலுநரொருவர் கூறினார். ஏனையோர் இன்டர்ன்ஷிப்பைத் தமது இலட்சிய தொழிற்துறையில் நுழைவதற்கான ஒரு படியாகப் பயன்படுத்தியிருந்தனர். முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு பெண் தனது இன்டர்ன்ஷிப்பிற்காக ஒரு தையல் கடையில் இணைந்தார்.ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற தனது கனவிற்கான பாதையாக அவ் அனுபவம் துணை புரியும் என நம்பியிருந்தார். அதேபோன்று, நாவலாசிரியராக வேண்டுமென்று ஆர்வமுள்ள மொனராகலையைச் சேர்ந்த யுவதியொருவர் ஒரு புத்தகக் கடையில் தனது பயிற்சியை மேற்கொண் டிருந்தார், அங்கு அவர் பழைய சிங்கள நாவல்களைப் படிக்க போதுமான நேரத்தைப் பெற்றிருந்தார், மேலும் அவருக்குத் தனது சொந்த நாவலை எழுதவும் நேரம் கிடைத்திருந்தது.

COVID-19 தொற்றுபரவலால் விரக்தியுற்றிருந்த இளைஞர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்தத் திட்டம் சரியான நேரத்தில் அமைந்தது என்பது பொதுவான அபிப்பிராயமாகும். அநுராதபுரத்தைச் சேர்ந்த பயிலுநர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “COVID-19 தொற்றுப்பரவலின் போது நாம் வீணடிக்கும் பெறுமதிமிக்க நேரத்தைக் கண்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ​​SYA ஆனது துவக்க முகாம் பயிற்சி, 4-மாதப் பயிற்சி, வெள்ளிக்கிழமை அமர்வுகள் மற்றும் வாராந்த இதழ்கள் ஆகியவற்றுடன் என் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதற்குச் சரியான வழியை வகுத்தது.அவை எனது அன்றாட அலுவல்களைப் பயனுள்ள முறையில் கழிப்பதற்குப் பெரிதும் உதவின.

ஒட்டுமொத்தமாக, இப்பயிற்சியில் ஈடுபடுவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கிய IYAP நிறுவனத்திற்குத் தங்களின் நன்றியை இளம் சந்ததியினர் தெரிவிக்கும் அதே வேளையில், அவர்களுக்கு முன்மாதிரிமிக்க குடிமக்களாக மாறுவதற்குத் தேவையானபலம் மற்றும் பலவீனங்கள் என்பவற்றைப் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி வழி வகுத்துள்ளது என்பதை அவர்கள் நன்றியோடு ஏற்றுக் கொண்டனர்.

2013 இல் ஸ்தாபிக்கப்பட்டுக் கொழும்பைத் தளமாகக் கொண்ட சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) என்பது இளைஞர்கள் தலைமையிலான/அடிப்படையிலான அமைப்பாகும், இது இளைஞர்களின் சக்தியையும் அவர்கள் அந்தந்த சமூகங்களிற்கும் நாட்டிற்கும் ஆற்றுகின்ற பங்களிப்பையும் நம்பியிருக்கின்றது.