Back to Top

புத்தர் முதல் காமசூத்ரா வரை...

புத்தர் முதல் காமசூத்ரா வரை...

July 14, 2022  07:57 am

Bookmark and Share
மாம்பழங்கள் இல்லாமல் இந்தியர்களின் கோடை காலம் எப்படி கடக்கும் என்று கற்பனை செய்வது கூட கடினம். கடும் வெப்பம் இருந்தாலும், மாங்காய்களும் மாம்பழங்களும் ஆக்கிரமிக்காத கோடை காலம் இருந்ததில்லை.

ஆம் பன்னா (மாங்காய் பானம்), ஆம்சூர் (மாங்காய் பொடி), ஊறுகாய், சட்னி, ஆம்பட்டி (உலர்ந்த மாழ்பழ கூழ்) போன்ற விஷயங்கள் இல்லாமல் நம் சமையலறை எவ்வளவு சலிப்பான இடமாக இருந்திருக்கும்.

ஆனால், இன்று நேற்றல்ல. மாம்பழங்களுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு, குறிப்பாக இந்தியர்களுடனான தொடர்பு மிகப்பெரியது.

வங்காள நவாப் முர்ஷித் ஜாபர் கான் தனது தலைநகரை டாக்காவிலிருந்து முர்ஷிதாபாத்திற்கு 1704 இல் மாற்றினார்.

மாம்பழத்தின் மீது தனி ஈடுபாடு கொண்ட இந்த நவாப் மற்றும் அவரது சந்ததியினர், அடுத்த பல தசாப்தங்களுக்கு தங்கள் தோட்டங்களில் பல புதிய வகை மாம்பழங்களை உருவாக்கினர்.

அதில் ஒன்று, நவாப் ஹுசைன் அலி மிர்சா பகதூர் தோட்டத்தில் விளைந்த கோஹே-தூர் என்ற மாம்பழம். இது முதலில் கிரேக்க ஹக்கிம் ஆகா முகமது என்பவரால் வளர்க்கப்பட்டது என்று அதன் கதை தெரிவிக்கிறது.

கோஹே-தூர் பழம் பார்க்க மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருந்ததால் ஹக்கீம் சாஹிப் ஒரு கூடை மாம்பழத்தை நவாப் சாஹிப்பிற்கு பரிசாக எடுத்துச் சென்றுள்ளார். அங்கு, நவாப் முழு மரத்தையும் கேட்டார்.

இதற்காக, மரம் வேரோடு பிடுங்கப்பட்டு நவாபின் தோட்டத்தில் நடப்பட்டது, ஹக்கீம் ஆகாவுக்கு இழப்பீடாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர், கோஹே-தூர் மாம்பழ வகை, நவாபுகளுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் 1897ல் பிரபோத் சந்திரா என்ற தோட்டக்கலை நிபுணர் எழுதிய ´A Treatise on Mango´ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபோத் சந்திரா, முர்ஷிதாபாத்தில் உள்ள நிஜாமத் தோட்டத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.

இந்த முக்கியமான புத்தகம் அக்கால முர்ஷிதாபாத்தில் விளைந்த மாம்பழங்களின் விரிவான பட்டியலைக் கொண்டுள்ளது. இதில் அலி பக்‌ஷ், பீரா, பிஜ்னோர் சஃப்-தா, தோ அண்டி, தூதியா, காலா பஹாட், கானம் பசந்த் மற்றும் நாசுக் பதன் என மொத்தம் நூற்றிமூன்று இனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புத்தகத்தின் கடைசிப் பகுதியில், மால்டாவில் வளரும் ஐம்பது வகையான மாம்பழங்களின் பட்டியலுடன் கூடவே தர்பங்கா, ஜியாகஞ்ச், பம்பாய், கோவா, மெட்ராஸ், மைசூர், ஜெயநகர் மற்றும் ஹாஜிபூர் மாம்பழங்கள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

1757 ஆம் ஆண்டு பிளாசி போரின் போது, ​​ராபர்ட் கிளைவின் படை, முர்ஷிதாபாத்தில் இருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள ஒரு பெரிய மாந்தோப்பில் முகாமிட்டிருந்தது என்ற வரலாற்று உண்மையும் முர்ஷிதாபாத் மாம்பழத்தோட்டங்களுடன் தொடர்புடையது.

எழுதப்பட்ட ஆதாரங்களை நாம் கருத்தில் கொண்டால், கடந்த நான்காயிரம் ஆண்டுகளாக இந்திய துணை கண்டத்தில் மாம்பழம் உண்ணப்படுகிறது.

கௌதம புத்தரின் அற்புதங்கள் முதல் இலங்கையின் பத்தினிஹேலாவின் நாட்டுப்புறக் கதைகள் வரையிலும், ஜோதிட கணக்கீடுகள் முதல் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம் வரையிலும் மாம்பழங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அழகான பெண்களின் பிறப்பு, மாம்பழத்தில் இருந்து ஏற்படுவதாக பத்தினிஹேலா கூறுகிறது. மாம்பழங்கள் மற்றும் பூக்கள் போன்றவை இல்லாமல் காளிதாசரின் உவமைகள் முழுமையடையாது. ஹியூன் சாங் மற்றும் இபின் பபூதாவின் பயணக் குறிப்புகளிலும் மாம்பழம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

அபுல் ஃபசலின் ´ஆயினே-அக்பரி´யில், அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆட்சியின் போது ஹுசைன் என்ற ஹக்கீம்(மருத்துவர்) இருந்ததாகவும், அவரது தோட்டத்தில் பல வகை மாம்பழங்கள் விளைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பேரரசர்,அவரை முதலில் ஆக்ராவிற்கும் பின்னர் பீகாருக்கும் ஆளுநராக நியமித்தார்.

போர்த்துகீசிய மாலுமிகள் 1498 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தரையிறங்கியபோது, ​​​​ முதல் முறையாக மாம்பழத்தை ருசித்தனர்.​​​​அதன் சுவை அவர்களை மந்திரம் போட்டதுபோல மயக்கியது. அவர்கள் இந்த தனித்துவமான பழத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

இதன் விளைவாக இந்திய மாம்பழம் பதினாறாம் நூற்றாண்டில் பிரேசிலை அடைந்தது. மேற்கிந்திய தீவுகளில், ஒரு குறிப்பிட்ட மாம்பழம் மிகவும் பரவலாக உள்ளது என்றால் அது `11ஆம் நம்பர்` என்ற வகை மாம்பழம்தான்.

1782 ஆம் ஆண்டு ஜமைக்கா கடற்கரையில் ஒரு பிரெஞ்சு கப்பல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. கப்பலில் மசாலா மற்றும் மாம்பழங்கள் நிறைந்திருந்தன என்று அதன் கதை சொல்கிறது.

கொள்ளையடிக்கப்பட்ட மாம்பழங்களை தின்று அதன் விதைகளை அருகில் உள்ள தேவாலய தோட்டத்தில் விதைத்தனர். விதைகளிலிருந்து வளர்ந்த செடிகளுக்கு எண்கள் ஒதுக்கப்பட்டன.

அந்த நூற்றுக்கணக்கான செடிகளில் இருந்து ஒன்று மட்டுமே உயிர் பிழைத்தது. எனவே 11 ஆம் எண் மாம்பழம் நடைமுறைக்கு வந்தது. சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு டஜன் வேறுவகை மாம்பழங்கள் இந்தியாவில் இருந்து ஜமைக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் வீரர்களிடையே ஒரு சொல் பிரபலமானது - டாமி அட்கின்ஸ்.

எந்த சராசரியான, உதவியற்ற மற்றும் அடக்கமான சிப்பாய், இந்த பெயரால் அழைக்கப்பட்டார். முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வளரும் ஒரு மாம்பழ வகைக்கு டாமி அட்கின்ஸ் என்று பெயரிடப்பட்டது.

இந்த எளிய இனம் நீண்டகாலம் கெடாமல் இருக்கும். இன்று அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் உண்ணப்படும் மாம்பழங்களில் 80 சதவிகிதம் டாமி அட்கின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கத்து. ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள்

இந்தியாவில் மாம்பழங்களின் வகைகள் எண்ணற்றவை.

சஃபேதா, சுஸ்கி, தசேரி,கல்மி,செளசா போன்ற உள்ளூர் பெயர்களைத் தவிர மேலும் பலவிதமான பெயர்கள் உள்ளன. மதுதூத், மல்லிகா, காமாங், தோதாபரி, கோகில்வாஸ், ஜர்தாலு, காமவல்லபா போன்ற பல வகையான பெயர்களை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் மாம்பழ வகைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் ரத்னகிரி மற்றும் அல்போன்சா, ஆந்திராவில் பங்கனபல்லி மற்றும் இமாம்பசந்த்: ஜூனாகட்டின் கேசர் ஆகியவை இல்லாமல் இந்தப் பட்டியல் முழுமையடையாது.

உண்மை என்னவென்றால், இந்தியாவில் விளையும் சிறந்த மாம்பழங்களின் இறுதிப் பட்டியலை உருவாக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் சில பெயர்கள் விடுபட்டுவிடும்.

மாம்பழத்துடன் சமூக ஒற்றுமையும், நட்பும் எப்போதும் இணைத்து பார்க்கப்படுகின்றன. வீட்டில் மாமரம் வைத்திருப்பவர்கள், பிறர் வீடுகளுக்கு மாம்பழம் அனுப்புவது வழக்கம். பின்னர் இவர்கள் தங்களுக்கு அனுப்பியவர் வீட்டிற்கு மாம்பழங்களை கொடுத்தனுப்புவார்கள்.

ஒருவர் வீட்டில் தசேரி வகை மாந்தோப்பு இருக்கும். மற்றவர் வீட்டில் சௌஸா வகை இருக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. அல்லாமா இக்பாலுக்கு, அக்பர் இலகாபாதி மாம்பழங்களை அனுப்பியதாக ஒரு கதை உள்ளது. தனது நகரத்திலிருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகூருக்கு அவர் அதை அனுப்பினார். அந்தக் காலத்தில் சாலைகள் இருந்தன. ஆனால் போக்குவரத்து சாதனங்கள் குறைவாகவே இருந்தன.

மாம்பழம் பத்திரமாக சென்றடைந்ததும், அல்லாமா இக்பால் கவிதை எழுதினார். அதன் பொருள்,

´மாம்பழங்களில் உங்கள் மந்திரத்தை ஊற்றியுள்ளீர்கள் எந்த சேதமும் இல்லா முறையில் லாகூர் வந்தடைந்தது ´லங்கடா´

அதேபோல, இங்கு அக்பர் தனது நண்பர் ஒருவரிடம் வெட்கத்தைவிட்டு மாம்பழங்களைக் கேட்கிறார்.

´ பெயர் எதுவும் தேவை இல்லை, நட்பின் செய்தியை அனுப்புங்கள்.

இந்த முறை எதை அனுப்பவில்லையென்றாலும் மாம்பழங்களை மட்டும் அனுப்புங்கள்.

நான் அவற்றை பலநாட்கள் வைத்து சாப்பிட முடியவேண்டும் அதில் கவனமாக இருங்கள்.

பழுக்காததை அனுப்ப இயலாவிட்டால் பழுத்ததையாவது அனுப்புங்கள்.

தோழரின் முகவரி உங்களுக்குத் தெரியும்

நேரடியாக இலகாபாத்திற்கு என் பெயரில் அனுப்புங்கள்´ நிறம், வடிவம், வாசனை மற்றும் சுவைக்கு அப்பால்

மாம்பழத்தை அதன் நிறம், வடிவம், மணம் மற்றும் சுவைக்கு அப்பால் புரிந்து கொள்ள, ஜோஷ்வா காடிசானின்,"மாம்பழம் சாப்பிடுவதற்கு பதினேழு வழிகள்"-என்ற புத்தகத்தை இங்கே குறிப்பிடவேண்டும்.

´ஜே´ என்ற ஒரு இளம் தாவரவியலாளர் அவரது பன்னாட்டு நிறுவனத்தால் தொலைதூர தீவுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு மாம்பழங்களை பேக்கிங் செய்யும் தொழிற்சாலையை அமைக்க அந்நிறுவனம் யோசித்து வருகிறது. ஜே, இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க வேண்டும்.

தீவில் அவர் தற்செயலாக ஒரு துறவியை சந்திக்கிறார். அவர் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை மாம்பழங்கள் மூலம் கூறுகிறார்.

புத்தகத்தின் ஒரு பகுதியில் துறவி மாம்பழத்தைச் சுவைக்கச் சொன்னார். மாம்பழத்துடன் கூடவே அது உருவாகக்காரணமான பூ, மரத்தண்டு, இலைகள், வேர்கள், மண், சூரியன் மற்றும் வெப்பம் ஆகியவற்றையும் சுவைக்க முயற்சிக்க வேண்டும் என்று துறவி கூறுகிறார்.

ஜே கண்களை மூடிக்கொண்டு இதைச் செய்ய முயற்சிக்கிறார். அப்போது, "மாம்பழம் எங்கு முடிவடைகிறது மற்றும் வானம் எங்கு தொடங்குகிறது என்பதையும் உணருங்கள்," என்று துறவி மேலும் கூறுகிறார்.

மாம்பழம் வெறும் பழமாக மட்டுமன்றி வரலாறாக, வாழ்க்கையாக, நினைவின் சுவடுகளாக, நிலைக்கும் அறிவுரைகளாக இந்தியர்களின் வாழ்வில் இணைந்தே இருக்கிறது.

Most Viewed