Back to Top

 ஆணுறைகள், மதுபானம் - அரசியல் தலைவர் கைது!

ஆணுறைகள், மதுபானம் - அரசியல் தலைவர் கைது!

July 27, 2022  10:29 am

Bookmark and Share
மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் பாலியல் தொழில் விடுதி நடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட மேகாலயா பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பெர்னார்ட் என். மரக் உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதாகும் மரக், கேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உத்தர பிரதேச காவல்துறையினருக்கு மேகாலயா பாஜக தலைவர் தொடர்பான தகவல் கிடைத்த நிலையில், அவரது வாகனம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அவருக்கு எதிராக தேடப்படும் நபர் என்ற அறிவிப்பை முன்னரே மேகாலயா காவல்துறை வெளியிட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை மரக்கின் பண்ணை வீட்டில் இருந்து 23 பெண்கள், 73 இளைஞர்களை போலீஸார் தடுத்து வைத்தனர். மேலும், அங்கிருந்து ஐந்து மைனர் சிறுமிகளையும் போலீஸார் மீட்டனர். பண்ணை வீட்டில் போலீஸ் சோதனை நடந்தபோது மரக் தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பாக மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங் கூறுகையில், "துராவைச் சேர்ந்த பெர்னார்ட் என் மரக் என்ற ரிம்புவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. துராவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை திங்கள்கிழமை பிறப்பித்தது. இது குறித்து வெளி மாநிலங்களுக்கு அவரது நடமாட்டம் தொடர்பாக தகவல் கொடுத்திருந்தோம். அதன் பேரில் அவர் கைதாகியுள்ளார்," என்று கூறினார்.

இதேவேளை பெர்னார்ட் மரக்கை இலக்கு வைத்து அவரது பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை நடத்திய நடவடிக்கையை மாநில பாரதிய ஜனதா கட்சி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மூன்று மாடி கட்டடத்தில் கீழ்தளம் நிகழ்ச்சிகளை நடத்தவும் முதல் தளத்தில் உள்ள 30 அறைகள் குடியிருப்புவாசிகள் வசிக்கவும், இரண்டாம் தளத்தில் ஆதரவற்றோர் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததாக பாஜக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இருந்தே அந்த விடுதியில் சிறார்கள் உள்பட இளைஞர்கள் தங்கி வந்ததாகவும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வந்தவர் பெர்னார்ட் மரக் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மரக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

மேகாலயாவில் ஆளும் முதல்வர் கான்ராட் கே சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணியில் (MDA) பாரதிய ஜனதா கட்சி அங்கமாக உள்ளது.கைது செய்யப்பட்டுள்ள பெர்னார்ட் என். மரக், ஒரு முன்னாள் போராளியின் மகன். மேகாலயாவில் அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சில் பி என்ற போராளிகள் பிரிவின் தளபதியாக செயல்பட்ட பிறகு இவர் அரசியல் பாதைக்குத் திரும்பியவர்.

ஆனால், பாலியல் தொழில் வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி அரசியல் பழிவாங்கும் செயலில் முதலமைச்சர் ஈடுபடுவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று பயப்படுவதாகவும் மரக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சோங், காவல்துறை அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டப்படி செயல்பட அரசாங்கம் அனுமதிக்கிறது என்று கூறினார்.

"எந்த கட்சியாக இருந்தாலும், அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டம் அதன் கடமையைச் செய்யும். விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துள்ளன, சட்டத்தை அதன் போக்கில் நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒத்துழைப்போம்" என்றும் டின்சோங் கூறினார்.

முன்னதாக, பெர்னார்ட் என். மரக்கின் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட சிறுமிகள், பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக எப்படி தகவல் கிடைத்தது என்று போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பெண்களையும் சிறுமிகளையும் மீட்டதாக தெரிவித்தனர்.

அந்த பண்ணை வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மதுபான பாட்டில்கள் மற்றும் ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளையும் போலீஸார் காட்சிப்படுத்தினர். ´ரிம்பு பாகன்´ என்ற மரக்கின் பண்ணை வீட்டில் டஜன் கணக்கான கார்கள் இருந்தன.தற்போது கைதாகியுள்ள பெர்னார்ட் மரக் மீது சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆள் கடத்தலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் மீது வட கிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் 25க்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் பதிவாகியிருந்தன.

Most Viewed