Back to Top

தீபத்திருநாள்

தீபத்திருநாள்

November 6, 2018  

Bookmark and Share
உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற இந்து மக்கள் இன்று தீபாவளிப் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்ட ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மன்னார், திருக்கேதீஸ்வரம் ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாள் பூஜைகள் நடைபெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடும் மழையின் மத்தியிலும் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.

வெளிநாட்டவர்கள் பலரும் நல்லூரின் தீபாவளி வழிபாடுகளில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி பூஜை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண நிருபர்கள் கிரிஷாந்தன், லெம்பட், கிருஷ்ணகுமார் மற்றும் பிரதீபன்)