Back to Top

சர்வதேச நாடுகளை நம்பி பயனில்லை - டக்ளஸ்

சர்வதேச நாடுகளை நம்பி பயனில்லை - டக்ளஸ்

March 11, 2014  03:37 pm

Bookmark and Share
சர்வதேச சமூகம் எங்களுக்காக பிள்ளை பெறமுடியாது நாமே நமது பிள்ளையை பெற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (11) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா அமர்வினை எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்களமாக நாம் பார்க்கமுடியாது. அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா அமர்வினை நாம் மருத்துவிச்சியாக பார்க்கமுடியுமே தவிர பிள்ளை பெறும் தாயாக பார்க்க முடியாது.

எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பி பயனில்லை. எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.

அந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்காதது துரதிஸ்டவசமானதே.

சர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும், உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும், உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தை காட்ட எமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி தேர்தலில் வெற்றியும் பெற்றது.

ஆனால் தற்போது ஜெனீவா மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப் போவதில்லை என்றும், தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து, எமது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நீலிக்கண்ணீர் வடித்து, ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றது.

அன்றே நாம் தீர்க்கதரிசனமாகக் கூறி வந்த உண்மைகளை ஏற்று நடந்திருந்தால், அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் என்ற எமது நடைமுறை சாத்திய வழிமுறைகளை விரும்பியிருந்தால், உலக நாடுகள் எமது மக்களை ஏமாற்றி விட்டதாக இன்று அழுது புலம்பி, நாடகம் ஆட வேண்டிய அவசியம் இங்கு நடந்திருக்காது என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை டானியல் ரொக்சியன் கொலை குற்றச்சாட்டில் கைதாகி உள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னால் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தற்போதைய வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவருமான கமலேந்திரன் தொடர்பாக கேட்டபோது,

கமலை நாம் ஏற்கனவே எமது ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து நீக்கிவிடோம். தற்போது ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து அவரை நீக்கிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் L.L.R.C அறிக்கையிலும் ஈ.பி.டி.பி.பற்றி குறிப்பிடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டும் ஆதாரமற்ற பொய். கொள்கை ரீதியான பிரச்சனைகளுக்கு கட்சி பொறுப்பாகலாம். ஆனால் தனி நபர் பிரச்சனைகளை எல்லாம் கட்சி பொறுப்பு கூற வேண்டும் என்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

ஈ.பி.டி.பி. பெயரில் யார் எந்த தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் அதற்கு கட்சி எந்த விதத்திலும் தடையாக இருக்காது என மேலும் தெரிவித்தார்.

(அத தெரண - நிருபர்)