Back to Top

மலையக முன்னோடி எழுத்தாளர், மக்கள் கவிமணி ஸி.வி வேலுப்பிள்ளைக்கு தபால் முத்திரை வெளியீடு

மலையக முன்னோடி எழுத்தாளர், மக்கள் கவிமணி ஸி.வி வேலுப்பிள்ளைக்கு தபால் முத்திரை வெளியீடு

September 15, 2014  11:11 am

Bookmark and Share
மலையக இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் மக்கள் கவிமணி என போற்றப்படுபவருமான ஸி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் நூறாவது ஜனனதின ஆண்டு இது.

1914 ஆம் செப்டெம்பர் 14ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் வட்டகொடை நகருக்கு அண்மையில் உள்ள மடகொம்பரை தோட்டத்தில் பிறந்த கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை இலங்கை சுதந்திர நாடாளுமன்றத்தின் (1947ஆம் ஆண்டு) உறுப்பினர், இலங்கை இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மதியுரைஞர் நிர்வாக பொறுப்பாளர் போன்ற பதவிகளை வகித்தவர்.

ஆசிரியராக, தொழிற்சங்கவாதியாக, கவிஞராக, நாவலாசிரியராக, பத்திரிகையாசிரியராக பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கிய அன்னாரது நூற்றாண்டு நினைவாக அவரது நிழற்படம் பதித்த இலங்கை தபால் முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாகொண்டாட்டமும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகள் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹட்டன் டி.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முத்திரை வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்கவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் விஷேட அதிதியாகவும் கலந்துகொள்கின்றனர்.

பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க, நுவரெலியா மாவட்ட தபால் அத்தியட்சர், முத்திரைப் பணியகத்தின் பணிப்பாளர் டி.ஸ்ரீகரன் உள்ளிட்ட அதிகாரிகள்; சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்கின்றனர்.

நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக ´நிலைமாற்றம் பெற்றுவரும் மலைநாட்டுத் தமிழர்´ எனும் தலைப்பில் முன்னாள் இந்துகலாசார ராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் நினைவுப் பேருரையாற்றவுள்ளார். ஸி.வி. அவர்கள் தொழிற்சங்க பணியாற்றிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தற்போதைய தலைவர் மனோ கணேசன் நினைவுப்பரவல் உரையாற்றவுள்ளார். மலையக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் நினைவுப்பரவல் உரைவழங்கவுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இருமாத இதழான ´மாவலி´யின் ஸி.வி சிறப்பிதழை முன்னாள் மாவலி ஆசிரியர் த.அய்யாத்துரை அவர்கள் வெளியிட்டு வைக்க கலைஞர் அந்தனி ஜீவா முதல் பிரதி பெறுகிறார். வரவேற்புரையை தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளர் ஜே.எம்.செபஸ்தியனும் நன்றியுரையை பொதுச் செயலாளர் எஸ் பிலிப்பும் வழங்கவுள்ளனர். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி மல்லியப்பு சந்திதிலகர் தொகுத்து வழங்கவுள்ளார்.

அண்மையில் மறைந்த எழுத்தாளர் சாரல்நாடன் எழுதிய ´இலங்கைத் தமிழ் மணிச்சுடர் - சி.வி.வேலுப்பிள்ளை´ எனும் நூலின் பிரதிகளை தொழிலாளர் தேசிய சங்கம் கொள்வனவு செய்து பிரதேச பாடசாலை நூலகங்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

விழாவுக்கு வருகைதரும் அனைவரும் ஸி.வி.அவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர்ஏற்றி மலரஞ்சலி செலுத்தவும் நினைவுப் பதிவேட்டில் கையொப்பம் இடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விழா ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.