Back to Top

ஜல்லிக்கட்டு திகதியை மாற்றியதைக் கண்டித்து மறியல்- தடியடி நடத்திய பொலிஸார் மீது கல்வீச்சு

ஜல்லிக்கட்டு திகதியை மாற்றியதைக் கண்டித்து மறியல்- தடியடி நடத்திய பொலிஸார் மீது கல்வீச்சு

March 18, 2017  10:07 am

Bookmark and Share
ஜல்லிக்கட்டு நடத்தும் திகதி மாற்றப்பட்டதைக் கண்டித்து, வியாழக்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பொலிஸார் மீது கல்வீசித் தாக்கி, 12 அரசு, தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளைத் உடைத்தது தொடர்பாக 51 பேரை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விராலிமலை - கீரனூர் சாலை அம்மன்குளத்தில் கடந்த 13-ம் திகதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பால், மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டை வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடத்திக் கொள்ள அனுமதித்தது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் உறுதியற்ற தடுப்புக் கட்டை உள்ளிட்ட பாதுகாப்புக் குறைகள் இருந்ததால், வரும் 28-ம் திகதி ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஆனால், இதை ஏற்காத ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களும் பொதுமக்களும் வெள்ளிக்கிழமையே போட்டி நடத்த அனுமதி கோரி, திருச்சி - மதுரை நான்கு வழிச்சாலை மற்றும் விராலிமலை சோதனைச்சாவடியில் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விராலிமலை வட்டாட்சியர் சதீஷ், காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக் மேத்தா ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது 12 அரசு, தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் கல்வீசி உடைத்தனர்.

இதனால், பேச்சில் உடன்பாடு எட்டப்படாமல் சாலை மறியல் நடைபெற்றது.

இரண்டரை மணி நேர மறியலால் பேருந்துப் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட, பொலிஸாரின் தடியடியில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில், புதுகை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். எம். இளங்கோ, காவலர்கள் அந்தோனிகுரூஸ், கென்னடி, விஜயகுமார், பாலாஜி, குமரேசன் உள்ளிட்ட 6 பொலிஸார் மற்றும் அரசுப் பேருந்து நடத்துநர் கருப்பையா உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து விராலிமலை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விராலிமலை பொலிஸார் 51 பேரைக் கைது செய்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட் என். பாரதராஜன் அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.