Back to Top

ஆசிய நாடுகளில் கடன் வாங்கும் நிலையில் சவுதி அரேபியா

ஆசிய நாடுகளில் கடன் வாங்கும் நிலையில் சவுதி அரேபியா

March 18, 2017  02:00 pm

Bookmark and Share
பொருளாதார நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் சவுதி அரேபியாவை சரிவில் இருந்து மீட்கும் அரசின் புதிய பொருளாதார புனரமைப்பு திட்டத்துக்கு அந்த நாட்டின் மந்திரிசபை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீப காலமாக பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெயை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற, பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது.

இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தேசிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

மேலும், வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு அந்நாடு விண்ணப்பித்துள்ளது. கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சவுதி அரசுக்கு சொந்தமான ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி பட்டத்து இளவரசரும், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரியுமான முஹம்மது பின் சல்மான் கடந்த ஆண்டில் முடிவு செய்தார்.

இந்த நிலையில், சவுதி நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் தற்போது ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார்.

சவுதி இளவரசர்கள் 25 பேர் உள்பட சுமார் ஆயிரம் உயரதிகாரிகள் கொண்ட பெரிய குழுவும் அவருடன் சென்றிருந்தது.