Back to Top

கட்டப்பாவ காணோம்

கட்டப்பாவ காணோம்

March 20, 2017  01:42 pm

Bookmark and Share
நடிகர் - சிபிராஜ்
நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் - மணி செய்யோன்
இசை சந்தோஷ் - குமார் தயாநிதி
ஓளிப்பதிவு - ஆனந்த் ஜீவா

சிறுவயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்ற அடைமொழியோடு வளர்ந்து வருகிறார் நாயகன் சிபிராஜ். இவருடைய அப்பா சித்ரா லட்சுமண் பல தொழில்களை செய்தும் நஷ்மடைந்து கடைசியில் ஜோசியராக மாறிவிடுகிறார்.

இந்தநிலையில், சிபிராஜ் ஒருநாள் நாயகி ஐஸ்வர்யாவை கிளப்பில் பார்க்கிறார்.

இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நெருக்கமாகிறார்கள்.

ஐஸ்வர்யா தன்னிடம் தான் ராசியில்லாத பையன் என்று கூறும் சிபிராஜுடைய அப்பாவித்தனம் பிடித்துப்போக, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா.

ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.

திருமணம் செய்ய ஆசைப்படும் இவர்களுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கையுள்ள சித்ரா லட்சுமணனோ ரெண்டுபேருக்கும் ராசி சரியில்லை என்று திருமணத்துக்கு தடை போடுகிறார்.

இருப்பினும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

தனியாக வீடு பிடித்து குடியும் போகிறார்கள்.

இந்த நிலையில், மிகப்பெரிய தாதாவான மைம் கோபியும் ஜோசியத்தின் மீது நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இவர் கட்டப்பா என்று வாஸ்து மீனை வளர்த்து வருகிறார்.

அதனால்தான் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மீனை யோகி பாபு திருடிச் சென்றுவிடுகிறார். திருடிச் சென்றவர் அந்த மீனை தண்ணி லாரியில் போட்டுவிடுகிறார்.

கடைசியில் அந்த மீன், வளர்ப்பு மீன்கள் கடை வைத்திருக்கும் லிவிங்ஸ்டன் வசம் சென்றுவிடுகிறது. ஏர்ஹோஸ்டசான சாந்தினி, தனது சிறுவயது தோழனான சிபிராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அந்த வாஸ்து மீனை வாங்கிக் கொண்டு, சிபிக்கு பரிசாக கொடுக்கிறாள்.

அதேநேரத்தில், காணாமல் போன வாஸ்து மீனை திருடியவனை தனது ஆட்களை விட்டு தேடி வருகிறார் மைம் கோபி.

இறுதியில், அந்த வாஸ்து மீன் மைம் கோபியின் கைக்கு கிடைத்ததா? சிறு வயதில் இருந்தே ராசியில்லாத பையன் என்று வளர்ந்த சிபிராஜ் கையில் கிடைத்த வாஸ்து மீன் அவருக்கு ராசியை கொடுத்ததா? வாஸ்து மீன் தனது கைக்கு வந்தபிறகு சிபிராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிபிராஜ் இப்படத்தில் ஹீரோயிசம் காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளே கிடையாது. முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம்.

அதிலும், கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ற நடிப்பை மட்டும் கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் மதுபானங்கள் குடிப்பதுபோன்றெல்லாம் துணிச்சலாக நடித்திருக்கிறார்.

படத்தில் இவருடைய கதாபாத்திரம்கூட துணிச்சல்மிக்கதுதான். அதே துணிச்சலுடன் நடித்து அசத்தியிருக்கிறார். அதேநேரத்தில் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் பேசி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

காளி வெங்கட் படத்தின் காமெடிக்கு ரொம்பவும் உதவியிருக்கிறார். சர்ப்ரைஸ் ஷீலாவாக வரும் சாந்தினி கலகலப்பான பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். மைம் கோபி ரெண்டு, மூன்று காட்சிகள் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.

யோகி பாபுவுக்கும் ஒரு சில காட்சிகள்தான். இருப்பினும், அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு கொடுக்கிறது.

சித்ரா லட்சுமணன், களவாணி திருமுருகன், டிடெக்டிவாக வரும் சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணி சேயோன் தனது முதல்படத்திலேயே மூடநம்பிக்கையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு அதில் வெற்றிபெற முயற்சி செய்திருக்கிறார். வாஸ்து மீன் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி நடக்கும் கதையை நகைச்சுவையோடு கொண்டுபோய் ரசிக்க வைத்திருக்கிறார்.

இருப்பினும், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருப்பதால் குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. அதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் தேவையான ஒளியில் படமாக்கி கைதட்டல் பெறுகிறார். பாடல் காட்சிகள் குளுமை இருக்கிறது.

சந்தோஷ் குமார் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘கட்டப்பாவ காணோம்’ காமெடி கலாட்டா.

Most Viewed