Back to Top

புரூஸ் லீ

புரூஸ் லீ

March 20, 2017  02:31 pm

Bookmark and Share
நடிகர் - ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை - கிரிடி கர்பந்தா
இயக்குனர் - பிரசாந்த் பாண்டியராஜ்
இசை - பிரகாஷ்குமார் ஜீ வி
ஓளிப்பதிவு - ஷங்கர் பி வி

நாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்.

ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார்.

புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார்.

இந்த நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள்.

அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார்.

அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விடுகின்றனர்.

இதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? என்பதே மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் இதுவரையிலான படங்களில் எப்படி நடித்தாரோ, அதிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

அவரது நடிப்பினால் இதுவரை சற்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இந்த படத்தைப் பார்த்ததும் கோபம் எகிறும் என்பது நிச்சயம்.

அந்த அளவிற்கு, காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.

நாயகி கீர்த்தி கர்பந்தாவுக்கு முதல் படம் என்றாலும், ஏற்கெனவே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகிபோலவே தெரிகிறார்.

மிகவும் அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் இவருடைய நடிப்பு படத்தில் எடுபடாமல் போய்விட்டது.

சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்

பாலசரவணன் காமெடிக்கென்று வந்தாலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்திருக்கிறார்.

படம் முழுக்க ஜி.வி.பிரகாஷ் கூடவே வந்தாலும், படத்தில் இவர் செய்யும் ஒருசில காமெடிகளைத்தான் ரசிக்க முடிகிறது.

மற்றபடி நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைக்கவே இல்லை.

சமீபகாலமாக நடிப்பில் முத்திரை பதித்து வரும் முனீஸ்காந்தை இந்த படத்தில் வெறுமனே உட்கார வைத்தே வேலை வாங்கியிருக்கிறார்கள்.

நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்தான். மன்சூர் அலிகான் ஒரு காட்சியில் வந்தாலும் தனது தனித்துவமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார்.

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தன் படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘புரூஸ்லி’ என்ற தலைப்பை வைத்துவிட்டு, சண்டையில் கவனம் செலுத்தவில்லை.

அதேநேரத்தில் நகைச்சுவையிலும் கவனம் செலுத்தவில்லை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு எந்த இடத்திலும் காமெடி வராததுபோலவே படமாக்கியிருந்தால் எந்தளவுக்கு கோபம் வருமோ, அதுதான் இந்த படத்தை பார்க்கும்போதும் வருகிறது.

நடிப்பில் கவனம் செலுத்தாத ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் ரொம்பவும் கவனம் செலுத்தி கைதட்டல் பெறுகிறார்.

அதேபோல், பாடல்களிலும் இவர் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இவரது கேமரா காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக அமைத்திருக்கிறது. இவ்வளவு நல்ல டெக்னீசியன்களை வைத்துக்கொண்டு படத்தை சொதப்பியிருப்பதுதான் ரொம்பவும் வருத்தத்திற்குரிய ஒன்று.

மொத்தத்தில் ‘புரூஸ்லி’ கோமாளி.

Most Viewed