Back to Top

42 ஈழத் தமிழர்களின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

42 ஈழத் தமிழர்களின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

June 19, 2017  02:58 pm

Bookmark and Share
தமிழகத்தின் கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த, இரும்பூதிப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

மாதத்திற்கு, இரண்டு முறை வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கமைய, கடந்த, மே, 7ல் வருகை பதிவு செய்யப்பட்டது.

எனினும், அன்றைய தினம், 42 பேர் சமூகமளிக்கவில்லை.

இதனால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, 42 பேரின் பதிவு நீக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்று காலை, 10.00 மணியளவில் நடந்த வருகை பதிவு முகாமில், அதிகாரிகள் அங்குள்ளவர்கள் விபரத்தை சேகரித்தனர்.

அப்போது, நீக்கப்பட்ட, 42 பேரையும், மீண்டும் பதிவு செய்யக்கோரி, மீதமுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், ´பதிவு நீக்கம் செய்யப்பட்ட, 42 பேரின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், அவர்களுக்கு தடையின்றி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்´ என, வலியுறுத்தினர்.

இதுகுறித்து, முகாம் சங்கத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது, தற்போது, கடுமையான வறட்சி என்பதால், கரூர், திருச்சி பகுதிக்கு, பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். அதில், கடந்த மாத வருகை பதிவின் போது, 42 பேர் வரவில்லை.

அதனால், அவர்கள் நீக்கி விட்டனர். இது நாள் வரை, இப்படி உத்தரவை போடவில்லை. தற்போது, இந்த உத்தரவு போடப்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசந்தர் கூறியதாவது,

கடந்த மாதம் வருகை பதிவு செய்யும் போது, 42 பேர் வராதது குறித்து ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆணையர் மற்றும் கலெக்டர் உத்தரவின் பேரில், 42 பேரின் பதிவு நீக்கம் செய்யப்பட்டது. இன்று (நேற்று) நடந்த வருகை பதிவு நாளில், அனைத்து மக்களும், நீக்கம் செய்யப்பட்ட நபர்களை மீண்டும் பதிவில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.