Back to Top

இலங்கை தேயிலை சர்வதேச கொண்டாட்டம் லண்டன் நகரில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

இலங்கை தேயிலை சர்வதேச கொண்டாட்டம் லண்டன் நகரில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

July 14, 2017  01:15 pm

Bookmark and Share
பிரித்தானியாவின் அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்கள், அரச-சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் வியாபார அமைப்புகள் போன்றன லண்டன் நகரில் நடைபெற்ற இலங்கை தேயிலை சர்வதேச கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தன.

லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் மூலமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜுலை மாதம் 6ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை கொழும்பு தேயிலை விற்பனையாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் அமரி விஜேவர்தன தனது வரவேற்புரையின் போது, ஜேம்ஸ் டெய்லர் மேற்கொண்டிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்பு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் சுமார் 150 வருடங்களுக்கு முன்னதாக தேயிலைச் செய்கையை ஆரம்பித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் தேயிலைத்துறையின் அபிவிருத்திக்கு பிரித்தானியா வழங்கியிருந்த பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.

இலங்கை தேயிலையின் உயர் தரம் மற்றும் வெவ்வேறு சுவைத்தெரிவுகள் போன்றவற்றுக்காக உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பும் மதிப்பும் காணப்படுகின்றமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று கூடியிருந்தோர் மத்தியில் சர்வதேச தேயிலை சபையின் தலைவர் இயன் கிப்ஸ் கருத்துத்தெரிவிக்கையில், சர்வதேச தேயிலை துறையில் இலங்கை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

கறுப்பு தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது. உலகுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலையை ஏற்றுமதி செய்வதிலும் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கிறது என்றார்.

இந்நிகழ்வின் போது, இலங்கை தேயிலையின் பிரித்தானிய தூதுவர் மைக் பன்ஸ்டன் உரையாற்றியிருந்தார்.

கடந்த 150 வருடங்களில் இலங்கை தேயிலை கடந்து வந்த வரலாற்று சாதனைகள் பற்றிய விவரங்களை அவர் சமர்ப்பித்திருந்தார்.

19 ஏக்கர் தேயிலை செய்கையுடன் ஆரம்பித்த இந்தத்துறை, பல சாதனைகளுடன் நீண்ட தூரம் பயணித்துள்ளது.

சமகாலத்தில் இந்தத்துறை எதிர்நோக்கியுள்ள பிரதான சவால்களில், சர்வதேச தேயிலைத்துறையில் தாம் எய்தியுள்ள உயர்ந்த ஸ்தானத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாகும்.

இதனை தக்கவைத்துக்கொள்ள முறையான செய்றபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வின் அனுசரணையாளரான கொழும்பு ஃபின்லேஸ் லிமிட்டெட் சார்பாக, நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளர் சத்யானி ராஜபக்ஷ உரையாற்றுகையில், லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை தேயிலை கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதையிட்டு ஃபின்லேஸ் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.

இலங்கை தேயிலைக்கும், பிரித்தானியாவுக்கும் மிகவும் நீண்ட வரலாறு காணப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்கள், வௌ;வேறு சிற்றுண்டி வகைகளையும், இனிப்புப் பண்டங்களையும் சுவைத்திருந்ததுடன், இலங்கையின் ஏழு தேயிலை வலயங்களிலிருந்து பெறப்பட்ட தேயிலைகளிலிருந்து உடன் தயாரிக்கப்பட்ட தேநீரையும் அருந்தி மகிழ்ந்தனர்.

படம்

1. விருந்தினர்கள் மத்தியில் உயர் ஸ்தானிகர் உரையாற்றுகிறார்.

2. சர்வதேச இலங்கை தேயிலை கொண்டாட்ட நிகழ்வில் ஒன்று கூடியிருப்போர்.

3. இலங்கை தேநீரை விருந்தினர்கள் சுவைத்து மகிழ்கின்றனர்

Most Viewed