Back to Top

Ad

வனத்தை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு

வனத்தை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு

July 16, 2017  05:27 pm

Bookmark and Share
முல்லைத்தீவில் இனப் பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 11.00 மணிக்கு முள்ளியவளை - ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது.

கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் - ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி - புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும்.

இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து மக்களை குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத் திட்டத்தை எதிர்க்க வேண்டியது கட்டாயமானதொன்றாகும்.

போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே, இந்த செயற்பாட்டை முற்றாக எதிர்க்கிறோம் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

வனம் அழித்தால், இனம் அழியும், வனத்தை அழிப்பதும் எங்கள் வாழ்வுரிமையை அழிப்பதும் ஒன்றே, நிலத் தொடர்ச்சியை சிதைத்து எம் இனத் தொடர்ச்சியை அறுக்காதே, இது இனவாதம் அல்ல வன வதைக்கு எதிரான வாதம், எம் அடையாளம் இழந்து அகதியாக வாழமாட்டோம், எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்காதே, இயற்கை சமநிலையை குழப்பி எம் வாழ்வை சிதைக்காதே, எங்கள் நிலம் எங்கள் வனம் காப்பது எமது கடமை, என்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஆலடிச்சந்தியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக சென்று, இளைஞர்கள் தமது எதிர்ப்பை இதன்போது வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(அத தெரண நிருபர்)

Most Viewed