
இலங்கைக்கு இலக்கு 388
July 17, 2017 02:09 pm
சிம்பாபேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 388 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதற்கமைய, 94.4 ஓவர்களை எதிர்கொண்ட நிலையில், 356 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, 102.3 ஓவர்களுக்கு தாக்குப் பிடித்து, 346 ஓட்டங்களைப் பெற்றது.
எனவே 10 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த சிம்பாபே மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
அந்த அணி சார்பில் களமிறங்கிய ஆரம்ப வீரர்கள் எவரும் அவ்வளவாக சோபிக்காது, சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற, இடை நிலை வீரராக வந்த சிக்கந்தர் ரசா நிதானமாக ஆடி, 127 ஓட்டங்களை குவித்தார்.
மேலும், மெல்கம் வாலர் 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி, போட்டியின் 4ம் நாளான இன்று, சற்று முன்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த அந்த அணி 377 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இதற்கமைய இலங்கை தற்போது 388 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.
(அத தெரண தமிழ்)