Back to Top

சட்டவிரோத மண் அகழ்விற்கும் மரக் கடத்தலுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத மண் அகழ்விற்கும் மரக் கடத்தலுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம்

August 8, 2017  03:50 pm

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை ஆற்றுப் பகுதிகளில் மணல் அகழ்வதைக் கண்டித்தும், புலுட்டுமானோடை, வெரச்சியாறு, உடும்புக்கல் ஆறு மற்றும் கார்மலை போன்ற வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதைத் தடுக்குமாறு கோரியும் , வேப்பவெட்டுவான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

சட்ட விரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக மணல் அகழப்படுவதால், ஆற்றின் ஆழம் அதிகரித்து, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் நிலம் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அகழப்படும் மண்ணை, கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்வதால் வீதிகளும் சேதமடைவதுடன், வீதியில் செல்லும் கால்நடைகளும் விபத்துக்குளாகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

´கடந்த முறை மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி, ஆர்ப்பாட்டம் செய்து, பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரிடம், எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தோம். எனினும், மணல் அகழ்வை நிறுத்துவது தொடர்பாக நான் மாத்திரம் முடிவெடுக்க முடியாது என்பதால் மாவட்ட செயலாளரிடமும் மனு கையளிக்குமாறு கூறினார்.

அதனடிப்படையில், மாவட்ட செயலாளரிடமும் மனுவைக் கையளித்தோம். இது தொடர்பாக சரியான தீர்வு கிடைக்குமென, மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் எங்களிடம் உறுதியளித்தார். ஆனால், தற்போது மணல் ஏற்றுவதற்கான அனுமதி புவி சரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது´ என்றனர்.

(அத தெரண நிரூபர்)