Back to Top

முதலாம் அரையாண்டில் செலான் குழுமம் 32% வளர்ச்சி

முதலாம் அரையாண்டில் செலான் குழுமம் 32% வளர்ச்சி

August 9, 2017  01:42 pm

Bookmark and Share
செலான் வங்கி மற்றும் அதனது குழுமம் ஆகியவை, 2017 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டதன் மூலம் உறுதிமிக்க வளர்ச்சி வேகம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. இக் காலப்பகுதியில் செலான் குழுமம், வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 2,310 மில்லியனை பதிவு செய்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32% அதிகரிப்பாகும்.

செலான் வங்கியானது வரிக்கு பிந்திய இலாபமாக ரூபா 1,805 மில்லியனைப் பெற்றுக் கொண்ட நிலையில் 2017 ஜூன் 30ஆம் திகதியன்று இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்திருக்கின்றது. 2016ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கி பதிவுசெய்த ரூபா 1,755 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 2.87% அதிகரிப்பாக காணப்படுகின்றது. சவாலான வியாபாரச் சூழல் மற்றும் NPA மீது மேற்கொள்ளப்பட்ட விவேகமான பெறுமதிக் குறைப்பு ஏற்பாடுகள் என்பவற்றுக்கு மத்தியிலும் செலான் வங்கி முதல் ஆறு மாதங்களில் ஒரு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றது.

இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இருந்தான நிலுவைத் தொகையை செலுத்துவதில் வங்கி அனுபவித்த தாமதநிலையின் காரணமாக NPA மீது பெறுமதிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்காவிடின், பாதுகாப்பளிக்கப்பட்ட கடன் வழங்குனர் என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை கடனை கொடுத்துத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ள சூழலில் அதிலிருந்து மற்றுமொரு கொடுப்பனவு தொகை கிடைக்கப் பெறக் கூடியதாக இருப்பதை கருத்திற் கொள்ளும் போது, செலான் வங்கியானது ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் வரிக்குப் பின்னரான இலாபத்தில் 21% இற்கும் அதிகமான இலாபத்தை அடையப் பெறும் எனலாம்.

ரூபா 6,147 மில்லியனாக காணப்பட்ட தேறிய வட்டி வருமானம், 2017 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் ரூபா 7,265 மில்லியனாக 18.19% இனால் அதிகரித்தது. முற்பணங்கள் மீதான தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் செயற்திறனான விலையிடல் மூலோபாயம் ஆகியவற்றின் விளைபயனாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. எவ்வாறிருப்பினும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் 53.26% அளவுக்கு வட்டிச் செலவுகள் மிக விரைவாக அதிகரித்து, அதன் மூலம் இலாப எல்லைகள் குறுகலடைந்தன. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2017 இன் முதலாம்; அரையாண்டில் கட்டண அடிப்படையிலான வருமான வகைகளைப் பொறுத்த வரையில், தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் 23.83% இனால் ரூபா 1,773 மில்லியனாக அதிகரித்தது.

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதி முதலீடுகளில் இருந்தான ஆதாயங்கள், அந்நிய செலாவணியின் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2016 இல் ரூபா 611 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2017 இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 46.08% இனால் ரூபா 892 மில்லியனாக அதிகரித்திருக்கின்றது. வட்டி வீதங்களில் விரும்பத்தக்க ஒரு போக்கு காணப்பட்ட நிலையில் அரச பிணையங்கள் மீதான சந்தை விலைச்சீராக்க (mark-to-market) ஆதாயங்களின் காரணமாக இவ்வதிகரிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது வங்கியின் தேறிய நாணயமாற்று வருமானத்தில் 20% கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2017 இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் வங்கியின் மொத்தச் செலவுகள் ரூபா 4,676 மில்லியனில் இருந்து ரூபா 5,421 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஊழியர்கள், தொழில்நுட்பம், கிளைகளை தரமேம்படுத்துதல் மற்றும் புதுப்பொலிவூட்டல் ஆகிய விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே மேற்கண்டவாறு செலவுகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும்.

செலான் வங்கி 2.97% தேறிய கடன் வளர்ச்சியை பதிவுசெய்துள்ள அதேநேரம், 2016 டிசெம்பர் மாதத்தில் ரூபா 236 பில்லியனாக காணப்பட்ட தேறிய முற்பணங்களின் பெறுமதி 2017 இன் முதலாம் அரையாண்டில் ரூபா 243 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2016 டிசெம்பரில் ரூபா 273 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த ஒட்டுமொத்த வைப்புத்தளமானது ரூபா 280 பில்லியனாக அதிகரித்துள்ளது. அத்துடன், CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) வீதம் 31.59% என்ற உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, இவ்வருடத்தின் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில் செலான் வங்கி மேற்கொண்ட சிறப்பான செயற்பாடுகளின் பயனாக வங்கியின் பங்கொன்றிற்கான உழைப்பு (EPS) ரூபா 5.16 ஆக அதிகரித்த மட்டத்தில் காணப்பட்டது. சராசரி சொத்துக்கள் மீதான வங்கியின் வருமானம் (ROAA) (வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தில்) 1.37% ஆக பதிவு செய்யப்பட்டதுடன், உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 12.55% ஆக பதிவானது. 2017 ஜூன் 30ஆம் திகதியில் இருந்தவாறு வங்கியின் ஒரு பங்கிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 85.40 (குழுமம் ரூபா 89.87) ஆக காணப்பட்டது.

செலான் வங்கியானது அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் (DFIs) ஊடாக 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீண்டகால நிதியளிப்பு வசதியை தமதாக்கிக் கொண்டதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மைல்கல் ஒன்றை அடைந்துள்ளது. வங்கியின் 2017-2020 மூலோபாய திட்டத்தில் ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகின்ற சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) கடன் வசதியளித்தல் செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்காகவே இந்த நிதி திரட்டப்பட்டது.

மைய மூலதனம் மற்றும் மொத்த மூலதன நிறைவு வீதம் தொடர்பான சட்ட ரீதியான ஆகக் குறைந்த தேவைப்பாட்டுக்கு எதிராக, 2017 ஜூன் 30ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் மைய மூலதன மற்றும் மொத்த மூலதன நிறைவு வீதம் ஆகியவை முறையே 10.42% ஆகவும் 12.67% ஆகவும் பதிவு செய்யப்பட்டன.

2016 ஒக்டோபர் மாதத்தில் ´பிட்ச்´ நிறுவனமானது செலான் வங்கியின் தரப்படுத்தலை மீளாய்வு செய்திருந்ததுடன், 2017 ஜனவரி மாதத்தில் உறுதியான கண்ணோட்டத்துடன் வங்கிக்கு ‘A-lka’ தரப்படுத்தலை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

2017 ஜூன் 30ஆம் திகதி இருந்தவாறு செலான் வங்கியின் கிளை வலையமைப்பானது தற்போது 166 வங்கியியல் நிலையங்கள், 6 பணவைப்பு இயந்திரங்கள் (CDMs), 203 ATM நிலையங்களை உள்ளடக்கியுள்ளது. கல்வியை மையமாகக் கொண்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முன்னெடுப்புக்களை செலான் வங்கி மேற்கொண்டு வருகின்ற அதேவேளை வசதி குறைந்த பாடசாலைகளுக்கான தனது நூலக செயற்திட்டத்தை மேலும் விரைவுபடுத்தியுள்ளது.

2017 இல் முடிவடைந்த ஆறு மாதங்களிலும் மேலும் 11 பாடசாலை நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை மொத்தமாக திறக்கப்பட்டுள்ள நூலகங்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருக்கின்றது. இதற்குப் புறம்பாக, பாடசாலைகளில் தற்போதுள்ள நூலகங்களை புனரமைத்து புதுப்பொலிவூட்டுதல், தரமேம்படுத்தல் ஆகியவற்றிலும் வங்கி முதலீடுகளை மேற்கொள்கின்றது.

செலான் வங்கி புதிய மூலோபாய திட்டமொன்றை வகுத்துள்ளது. வங்கியை 2020 ஆம் ஆண்டை நோக்கி முன்கொண்டு செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கிளை வலையமைப்பை விஸ்தரித்தல், CASA இனை அதிகரித்தல், டிஜிட்டல் வழிமுறைகளை உள்வாங்கிக் கொள்ளல், வங்கிக்காப்புறுதி விற்பனைகளை மேம்படுத்தல், SME தொழிற்பாட்டு மாதிரியை மீள வடிவமைத்தல் போன்றவை இப்புதிய மூலோபாய திட்டத்தின் நோக்கங்களாகும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் வங்கி தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

செலான் வங்கியானது இன்னுமொரு சிறப்பான ஆண்டை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்திருக்கின்ற நிலையில், மேற்குறிப்பிடப்பட்டவை வங்கியினால் கூடுதலாக கவனம் செலுத்தப்படும் முக்கிய விடயங்களாக காணப்படும்.