Back to Top

3 வருடங்களில் 2500 வீடுகளை அமைப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு

3 வருடங்களில் 2500 வீடுகளை அமைப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு

August 13, 2017  07:45 am

Bookmark and Share
எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து தச்சுத் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு யாழ்.திருமறைக்கலாமன்றத்தில் நேற்று (12.08) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தச்சுத் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாணத்தில் 2551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிகழ்வுகள் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வடமாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

தேசிய வீடமைப்பு அமைச்சினால் புதிதாக குடிநீர் மற்றும் மின்சாரம் வசதிகள் உள்ளடங்கலாக கட்டப்பட்டு வரும் 49 வீடுகளும் திறந்து வைப்பதற்கு நான் 49 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வேன் என்றார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 37வது வீட்டினை திறந்து வைக்கவுள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாடுமுழுவதும் 439 திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இந்த வருடத்திற்குள் 500 வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்கவேண்டுமென்பதே எமது நோக்காக இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் எந்தவிதத்திலும் மத மற்றும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில், சகோதரத்துவத்தினையும் அன்பை, சமாதானத்தினையும் பகிர்ந்து வாழ வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

(அத தெரண செய்தியாளர்)