Back to Top

60 குழந்தைகள் உயிரிழப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம்

60 குழந்தைகள் உயிரிழப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வர் இடைநீக்கம்

August 13, 2017  10:18 am

Bookmark and Share
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த துயர நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே உத்தரவிட்டுள்ளன.

இதனிடையே, குழந்தைகள் மரணத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அமைந்துள்ளது பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனை.

ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் சமீபகாலமாக ஆக்சிஜன் உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அதுவும் 48 மணி நேரத்துக்குள் 30 குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

கடந்த 5 நாள்கள் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், மொத்தம் 63 குழந்தைகள் பிராண வாயு இல்லாமல் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரிலேயே இத்தகைய துயரம் அரங்கேறியிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கும் வித்திட்டது.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ராவை உத்தரப் பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

அவரது கட்டுப்பாட்டின் கீழ்தான் பாபா ராகவ் தாஸ் மருத்துவனை செயல்படுகிறது என்பதால் இந்த அதிரடி முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.

நிலைமையை அரசு கண்காணிக்கிறது

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவனையில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், நிலைமையை நேரடியாக பிரதமர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாநில அரசிடமும் தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.