Back to Top

Ad

பலத்த பாதுகாப்புடன் அதிமுக பொதுக்குழு கூட்டம்; சசிகலா நீக்கப்படுவாரா?

பலத்த பாதுகாப்புடன் அதிமுக பொதுக்குழு கூட்டம்; சசிகலா நீக்கப்படுவாரா?

September 12, 2017  11:05 am

Bookmark and Share
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு துருவங்களாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அண்மையில் இணைந்தனர்.

இதையடுத்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் கூட்டியுள்ளனர்.

2,300க்கும் மேற்பட்ட பொதுக்குழு, 750க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலா நீக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா நீக்கம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பொதுக்குழுவுக்கு தடை கோரி டி.டி.வி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மண்டபத்திற்கு வரத்தொடங்கி விட்டனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்துள்ளனர்.

குறிப்பாக கட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவுக்கு கட்சியை வழிநடத்தும் அதிகாரம் அளிக்கும் வகையிலான தீர்மானம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Viewed