Back to Top

Ad

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

September 12, 2017  05:01 pm

Bookmark and Share
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் உள்ள மக்கள் தொடர்பில் சில அதிகாரிகளும் பொது அமைப்பின் பிரதிநிதிகளும் பிழையான கருத்துகளை தெரிவித்து வருவதாக கூறியும், தமது நிலையினை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்தியும் பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்குள் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றது. குறித்த திண்மக்கழிவு நிலையத்தினால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பினை திருப்பெருந்துரை மக்கள் தெரிவித்துவரும் நிலையில், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குவியும் குப்பைகளினால் நாளாந்தம் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் அவற்றினை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

இதன்போது திருப்பெருந்துரை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு சிலர் கூறிவருவதுடன் 35 குடும்பங்களே பாதிக்கப்படுவதாக சிலர் தவறான வகையில் பேசிவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பெருந்துறை பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் குப்பைகள் கொட்டுவதனால் திருப்பெருந்துறையில் உள்ள அனைத்து மக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு நகரில் உள்ள மக்களும் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மழைகாலத்தில் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் மட்டக்களப்பு வாவியுடன் கலப்பதனால் மட்டக்களப்பு மாவட்டமே பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றர்.

எமது பிரச்சினையை அனைவரும் புரிந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாங்கள் மட்டக்களப்பு நகரில் குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதனை இங்கு கொட்டாமல் வேறு ஒரு இடத்தினை மக்கள் இல்லாத இடத்தில் கொட்டுமாறே கேட்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

(அத தெரண நிரூபர்)

Most Viewed