Back to Top

Ad

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு 27 ம் திகதி

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு 27 ம் திகதி

September 13, 2017  04:47 pm

Bookmark and Share
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி வழங்கப்படுமென ரயல் அட் பார் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட் பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட்பார் நேற்றும் இன்றும் (13.09) கூடியது.

தொகுப்புரையின் இறுதியில், 4, 7, 9 ம் எதிரிகள் சார்பாக சட்டத்ரணி ஆ.கேதீஸ்வரன் தனது தொகுப்புரையின் சமர்ப்பணத்தினை மன்றில் தெரிவித்தார்.

அதன்போது, 4,7,9 ஆம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டின் சாட்சியங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென கோரினார்.

அதேவேளை, 5ம் எதிரி சார்பாக சட்டத்தரணி ரகுபதி மற்றும் 1, 2, 3, 6, 8 ஆகியோர் சார்பாக சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன ஆகியோர் தமது தொகுப்புரைகளின் சமர்ப்பணத்தினை முன்வைத்தனர்.

எதிரிகள் சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைகள் நிறைவுபெற்றதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்பு வழங்கப்படுமென நீதிபதிகள் அறிவித்தனர்.

அன்றையதினம் 11வது எதிரியாக இருந்து அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனையும் மன்றிற்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

(அத தெரண நிரூபர்)

Most Viewed