Back to Top

லலித் மற்றும் அனுஷவுக்கு பிணை வழங்கப்படுமா? 20ம் திகதி விளக்கமளிக்க உத்தரவு

லலித் மற்றும் அனுஷவுக்கு பிணை வழங்கப்படுமா? 20ம் திகதி விளக்கமளிக்க உத்தரவு

September 14, 2017  10:41 am

Bookmark and Share
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 20ம் திகதி இது தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க சட்ட மா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த இருவர் மீதான தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன் காரணமாக அந்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வரும் வரை இருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.

முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட நீதிபதி, அவர்கள் இருவருக்கும் பிணை வழங்குவது சம்பந்தமாக சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் இவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அடையாளப்படுத்தி, இருவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(அத தெரண தமிழ்)

Most Viewed