Back to Top

குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

November 14, 2017  09:54 am

Bookmark and Share
சென்னையின் பரபரப்பான சாலைகளில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டும் சிக்னலில் நிற்கும்போது, ´ஹெல்மெட் அணியுங்கள்´ என பிஞ்சுக் கைகளில், துண்டுப்பிரசுரங்களை ஏந்திக்கொண்டு ஐந்து வயது ஆகாஷ் வாகன ஓட்டுனர்களிடம் கோரிக்கை வைத்தபோது யாராலும் நிராகரிக்க முடியவில்லை.

பலரும் அடுத்தநாள் ஹெல்மெட் அணிந்துவந்து சிறுவனுக்கு நன்றி தெரிவித்தனர்.

சாலையில் நின்று விழிப்புணர்வூட்டிய சிறுவன்

தற்போது எட்டு வயதான ஆகாஷ் , மதுவுக்கு எதிரான போராட்டம், கருவேல மர ஒழிப்பு, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என பல சமூக அவலங்களை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நேரத்தில், தன்னைப் போன்ற குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிறுவன் ஆகாஷிடம் அவனது வெற்றிக் கதைகளை கேட்டோம் .

´´நானும் அப்பாவும் வீட்டுக்கு வரும் வழியில் சாலை விபத்து நடந்து ஒருவர் இறந்து கிடந்தார். ஹெல்மெட் போட்டிருந்தா அவரு தப்பிச்சிருக்கலாம்னு அப்பா சொன்னாரு. இறந்து போனவரோட குழந்தைகள் ரொம்ப கஷ்டப்படுவாங்கனு தோனுச்சு.எல்லோரும் ஹெல்மெட் போடனும்னு ரோட்டில நின்னு சொன்னேன். நிறைய அண்ணன்கள் அடுத்தநாள் ஹெல்மெட் போட்டுட்டுவந்து எனக்கு நன்றி சொன்னாங்க,´´ என தனது முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து ஆர்வமாகப் பேசினார் ஆகாஷ்.

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் எனில் அவர்களின் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் என எல்லா இடங்களும் பாதுகாப்பு அளிப்பவையாக இருக்கவேண்டும் என்றும் அதை உறுதிப்படுத்தப் பெரியவர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை செய்யவேண்டும் என்கிறார் ஆகாஷ்.

ஆகாஷின் போராட்ட யுக்தி

´´நம்ம வீட்டில நாம எதாவது கேட்டா முதல்ல பெற்றோர் வேண்டாம்னு சொல்லுவாங்க. ஆனா அழுது, அடம் பண்ணி நாம வாங்குறோம். அதே மாதிரி சில நல்ல விஷயங்கள் நடக்கணும்னா நாம் வீட்டில செய்யறதை வெளியில செய்ய வேண்டும். பெரியவங்க நாம சொன்னா உடனடியாக எதையும் ஏதுக்கமாட்டாங்க. நாமதான் விடாம முயற்சி செய்ய வேண்டும்,´´ என தனது போரட்ட யுத்தியை விளக்குகிறான் சிறுவன் ஆகாஷ்.

தனது போராட்ட யுத்தியை பயன்படுத்தி தன்னுடைய கிராமத்தில் அரசு மதுக்கடை ஒன்றை மூடியுள்ளான் ஆகாஷ் .

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி

சென்னை படூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அந்த மதுக்கடை முன்பாக அமர்ந்து படிக்கும் போராட்டத்தை ஆகாஷ் முன்னெடுத்தார். ஏப்ரல் 2017ல் அந்த மதுக்கடையை அரசு மூடிவிட்டது.

´´என்னைப் போல பல குழந்தைகள் அந்த மதுக்கடை வழியா போறாங்க. அங்க இருக்குற குளத்தில் அம்மா, அக்கா எல்லோரும் துணி துவைக்கிறாங்க. அங்க மதுக்கடை இருந்துச்சு. அதனால போரட்டம் நடத்தினேன். நான் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்கனு போலீஸ் சொன்னாங்க. பெரியவங்க சிலரும் சொன்னாங்க. கடையை மூடலைனா நான் வீட்டுக்கு போகமாட்டேன்னு சொன்னேன். என்னோட போரட்டத்தோட விளைவா அந்த கடையை மூடிட்டாங்க,´´ என மதுவுக்கு எதிரான போராட்டம் பற்றி விவரித்தபோது ஆகாஷின் முகத்தில் வெற்றிச் சிரிப்பு.

குழந்தைகள் மீதான பாலியல்வன்கொடுமையை தடுக்க முயற்சி

தன் வயதை ஒத்த குழந்தைகளோடு விளையாடிய நேரத்தில்தான் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அறிந்திருக்கிறார் ஆகாஷ். ´´நான் முதல்ல குழந்தைகள் உதவிஎண்ணுக்கு(1098) கால் பண்ணி சொல்லிவிட்டு, அப்பாவோட உதவியோட பாலியல் கொடுமையை பற்றி காவல்துறைக்கு தகவல் சொன்னோம். ஆனா பாதிக்கப்பட்ட பொண்ணை பல தடவை காவல்நிலையத்துக்கு வரசொன்னங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் பாதிக்கப்பட்டவங்க நீதி கேட்டு அலையணும். அவுங்கள தேடி வந்து யாரும் உதவ மாட்டாங்களா?, இது என்னுடைய அடுத்த போராட்டம்,´´ என்று கூறினான் சிறுவன் ஆகாஷ்.

விளம்பரத்திற்காக விழிப்புணர்வு செய்யவில்லை

ஆகாஷின் போராட்ட உணர்வுக்கு என்ன காரணம் என்று அவரது தந்தை ஆனந்தனிடம் கேட்டோம்.

´´என் மகனின் போராட்டங்கள் விளம்பரத்திற்காக செய்யப்படுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நானும் எல்லா பெற்றோர்களைப் போல என் மகன் படிப்பில், விளையாட்டுகளில் பரிசு பெறவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் என் மகன் அவற்றைத்தாண்டி அவனுக்கு இருக்கும் சமூக பொறுப்பை சிறுவயதில் உணர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று விருப்பப்படும்போது, என்னால் அவனை தடுக்கமுடியவில்லை,´´ என்றார்.

ஆகாஷ் கேட்கும் பல கேள்விகளுக்கு தன்னிடம் பதில்கள் இருப்பதில்லை எனக் கூறும் ஆனந்தன், மகனின் கேள்விகளை காதுகொடுத்துக் கேட்டு, அவன் கருத்துக்களை மதித்து, அவனுக்கு உதவி செய்வதாக கூறுகிறார்.

´´சுதந்திரமான குழந்தைகளே வெற்றியடைவார்கள் என்பதை என் மகனிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எதையும் நான் அவனிடம் திணிப்பதில்லை. அவனிடம் இருந்தே நான் படிப்பினைகளை பெறுகிறேன்,´´ என்றார் ஆனந்த்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, பள்ளிக்கூடத்திற்கு ஒருநாள் கூட ஆகாஷ் விடுப்பு எடுக்கவில்லை என்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பதிலும் தவறவில்லை என்றும் ஆனந்தன் கூறினார்.

நீதிபதியிடம் பாராட்டு பெற்ற ஆகாஷ்

முதலில் மகனின் படிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும், அவற்றை பாதிக்காத வகையில் அவன் செயல்பட அனுமதிப்பதாகக் கூறுகிறார் ஆனந்தன்.

´´குடிமகன் என்ற படத்தில் ஆகாஷ் நடிக்கிறான். பலமுறை படக்குழுவினர் வந்து கேட்டபின்னர், அந்த படம் முக்கியமான கருத்துப்படமாக இருப்பதால் ஆகாஷ் நடிக்க ஒத்துக்கொண்டேன். ஆனால் அதற்காக அவன் பள்ளிக்கூடம் போவது தடைபடக்கூடாது என்று படக்குழுவினரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் அனுமதித்தேன்,´´ என்கிறார் ஆனந்த்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அவரது இல்லத்திற்கு ஆகாஷை அழைத்து வாழ்த்திய நிகழ்வு தந்தை ஆனந்தனை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது.

´´நீதிபதி அழைத்த அன்று ஆகாஷ் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்காமல் செல்வது பற்றி சொன்னபோது, அவனுடைய விடுமுறையில் சந்திப்பதாக நீதிபதி சொன்னார். இதுபோல பல இனிமையான தருணங்களை தந்த ஆகாஷ், எனக்கு கிடைத்த வரம்,´´ என்றார்.

தன் மகன் மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது தன்னை மேலும் ஆனந்தப்படுத்துகிறது என்றார் ஆனந்தன்.

Most Viewed