Back to Top

கொழும்பு மாநகர சபை தேர்தலில் தமிழர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- என்.குமரகுருபரன்

கொழும்பு மாநகர சபை தேர்தலில் தமிழர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- என்.குமரகுருபரன்

December 7, 2017  04:53 pm

Bookmark and Share
கொழும்பு மாநகரசபை தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமானதாகும்.

கடந்த மாநகரசபை தேர்தலிலே வெற்றி பெற்ற தமிழ் மாநகர சபை உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்தார்களா? அல்லது தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்களா என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தெரிவித்ததாவது, கடந்த மாநகரசபை தேர்தலிலே வெற்றி பெற்ற தமிழ் உறுப்பினர்களில் பலர் மக்களுக்கு எவ்விதமான சேவையினையும் ஆற்றவில்லை.

மாறாக கட்டிங்களுக்கான நிர்மாண அனுமதிகளை பின் கதவினூடாக பெற்றுக் கொடுத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டமை யாவரும் அறிந்த உண்மை.

அது மட்டுமின்றி பலவிதமான ஊழல்களில் இவர்கள் ஈடுபட்டதாக இன்று பரவலாக பேசப்படுகின்றது.

இப்படியிருக்கும் நிலைமையில் மீண்டும் இத்தமிழ் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக களமிறங்கி எவ்வாறு மக்களிடம் வாக்குகளைப் பெற முடியும்.

கடந்த மாநகரசபை காலக்கட்டத்தில் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை தமிழ் சங்க ஒழுங்கையாக பெயரிடப்பட முனைந்த போது கடந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக அது சங்க ஒழுங்கையாக பெயர் மாற்றப்பட்டது.

அப்போது அதற்கான எதிர்ப்புகளை தெரிவித்த மாநகரசபை உறுப்பினர்களும் அவர்களை சார்ந்த கட்சியின் தலைமையும் தங்களது ஆட்சியை உருவாக்கி இதனை தமிழ்ச்சங்க ஒழுங்கையாக மாற்றுவோம் என ஊடகங்களில் ஆவேசமாக அறிக்கைகள் விட்டது மக்கள் மறந்துவிடவில்லை.

ஆனால் இந்த அவர்களது ஆட்சியில் மொழிகளுக்கான அமைச்சினையே வைத்துக் கொண்டு இதனை செய்து முடிக்க முடியாது நிற்பவர்கள் மீண்டும் வெள்ளவத்தை பகுதி மக்களிடம் வாக்குகளை கேட்பது நியாயமாகுமா?

கடந்த ஆட்சி காலத்தில் அலரி மாளிகைக்கு பின் புறமிருந்த பூமாரி அம்மன் கோயில் அகற்றப்பட்ட போது அதற்கு எதிராக ஆவேச கண்டனங்களை எழுப்பிய இன்றைய அமைச்சர்கள் இப்பொழுதும் அவ்விடம் வெறும் வாகனத் தரிப்பிடமாகவே இருந்து வருகின்றது.

இதில் கோவில் நிர்வாகம் கேட்கும் வெறும் ஏழு பேர்ச் நிலத்தைக் கூட இன்றைய அரசாங்கத்திலிருக்கும் இவர்களால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

இந்துமத விவகாரத்திற்கு பொறுப்பான ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரும் வாக்குறுதியளித்து விட்டு மௌனமாக இருக்கின்றார்.

இந்த நிலைமையில் இன்று அரசாங்கத்திடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சி வேட்பாளர்களோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களோ தமிழ் மக்களிடம் வாக்குகள் கேட்பதில் நியாயம் இல்லை.

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்க தயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு இத்தேர்தல் மூலமாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் ஒரு செய்தியினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனின் தலைமையில் களமிறங்கவிருக்கும் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதனூடாக மக்கள் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளக் கூடிய நிலைமையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

Most Viewed