Back to Top

கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அவலம்

கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அவலம்

January 5, 2018  05:16 pm

Bookmark and Share
கர்ப்பிணி பெண்ணொருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டம், சந்திரசேகரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டம், சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான சிங்கமூர்த்தி கயானி (வயது 21) என்பவராகும்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பெண் இரட்டைச் சிசுக்களைச் சுமந்திருந்த 8 மாதக் கர்ப்பிணி எனவும் அவருக்கு பிரசவ வலி​ ஏற்பட்டவேளை உறவினர்களால் தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு தோட்ட அம்பியூலன்ஸ் வண்டியில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவரின் வயிற்றிலிருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதோடு, லிந்துலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே குறித்த கர்ப்பிணி பெண் இறந்திருந்ததாகவும் லிந்துலை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு ​அனுப்பி வைக்கப்பட்டதுடன், நுவரெலியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி முதித்த குடாகம முன்னிலையில் மரண பரிசோதனையை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதனை அதிகாரி டபிள்யு.என். எதிரிசிங்க உயிரிழந்த பெண்ணின் உடற்பாகங்கள் சில பரிசோதனைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் முடிவுகள் அதன் பின்னரே வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் நேற்று (04) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பிலான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் திருகேதீஸ்)