Back to Top

மேல் மட்ட வகுப்பினர் ஒன்றாக வாழ்கின்றனர் -  நாங்கள் தான் பிரிந்து வாழ்கின்றோம்!

மேல் மட்ட வகுப்பினர் ஒன்றாக வாழ்கின்றனர் - நாங்கள் தான் பிரிந்து வாழ்கின்றோம்!

January 29, 2018  01:45 pm

Bookmark and Share
இந்த நாட்டில் காணப்படும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டும். இனங்களிடையே காணப்படும் சந்தேகங்கள் களையப்படவேண்டும். இனவாதத்தினை தோற்கடித்து இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும். அதற்காக ஒன்றுபடுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் பிள்ளையாரடியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டம் நேற்று (29) இரவு நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப்குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி உட்பட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அனுர குமார திசாநாயக்க, எங்களது வாக்குளைப்பெற்று பாராளுமன்றம் செல்பவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகின்றோம். அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதன் காரணமாகவே மக்களுக்கு அரசியல் மீது ஒரு வெறுப்புணர்வு இன்று ஏற்பட்டுள்ளது. இந்த பிழையான அரசியலை மாற்றவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்களிடம் மக்கள் விடுதலை முன்னணி வந்துள்ளது.

இந்த நாட்டினை கடந்த 70 வருடமாக ஆட்சி செய்தவர்கள் எதனையும் மக்களுக்கு செய்யவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையே இருந்து வருகின்றது. எங்களது ஆட்சியாளர்கள் இந்த நாட்டினை சீரழித்துள்ளனர்.

சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆயுதப் போராட்டங்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகளாகும். வடகிழக்கில் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் இந்த போராட்டத்தில் கொல்லப்படவில்லை.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் பதில் கூறவேண்டும். இந்த நாட்டின் ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்டது இந்த உயிரிழப்புகள் மட்டுமேயாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்களே. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுப்பவர்கள். இந்த நாட்டிலேயே இறந்து இந்த நாட்டிலேயே பசளையாக மாறுகின்றவர்கள். நாங்கள் அனைவரும் இந்த நாட்டில் ஒன்றுபட்டு வாழவேண்டிய தேவையுள்ளது.

இந்த நாட்டில் இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

தமிழர்கள் சிங்களர்களையும், சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையே இன்றும் இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையினையே இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இனங்களுக்கிடையே ஏற்படும் பிரிவினைகள் அரசியல்வாதிகளுக்கு இலாபமாக மாற்றப்படுகின்றது.

எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றாகவே இருக்கின்றனர். அவர்கள் பிரிந்திருப்பதில்லை. இந்த நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்துவதில் மிகவும் சிறப்பான முறையில் மகிந்த ராஜபக்ஷ் செயற்பட்டு வருகின்றார். விக்னேஸ்வரனின் பிள்ளை வாசுதேவ நாணயக்காரவின் பிள்ளையினை திருமணம் செய்துள்ளது. அவர்களுக்கு இடையில் எந்த இனமுரண்பாடுகளும் இல்லை. பசில் ராஜபக்ஷ்வின் சொத்துகள் நடேசன் என்பவரின் பெயரில் உள்ளது. அவர்கள் சிங்களவர் தமிழர் ஒன்றாகவே உள்ளனர். எங்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் நாங்கள் கீழ் மட்ட வகுப்பினர், அவர்கள் எல்லோரும் மேல்மட்ட வகுப்பினர். மேல்மட்டத்தில் உள்ள அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றனர். கீழ் மட்டத்தில் உள்ள நாங்கள் தான் பிரிந்து வாழ்கின்றோம். நாங்கள் பிரிந்துவாழ்வதே இவ்வாறான மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இலாபமாக இருக்கின்றது.

அதன் காரணமாகவே நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். நாங்கள் பிரிந்து செல்லாமல் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள அரசியலை மாற்றியமைப்போம். இங்குள்ளவர்கள் பல கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் எந்த நன்மையினையும் பெற்றுக்கொள்ளவில்லை.

நாங்கள் இலைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றோம். எமது பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தொழில் இல்லா பிரச்சினை, கல்வி பிரச்சினை என ஏராளமான பிரச்சினை. ஆனால் எமது அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பிரச்சினை எதுவும் இல்லை. அவர்களுக்கு இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் வீடுகளும் உள்ளன. நாங்கள் கஷ்டப்பட்டு உழகைக்கும் நிதிகளை அரசியல்வாதிகள் மூட்மைகளில் கட்டிக்கொள்கின்றனர்.

இந்த நாட்டில் காணப்படும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டும். இனங்களிடையே காணப்படும் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இனவாதத்தினை தோற்கடித்து இனங்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஒன்றுபடுமாறு அழைக்கின்றேன்.

அடுத்து இந்த நாட்டினை சூறையாடுபவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். இந்த கள்வர்கள் அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் நடைபெறாத வகையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் கொள்ளையடிக்காத திருடாத, கொள்ளையடிக்காத, ஊழல் செய்யாத ஒரேயொரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி மட்டுமேயுள்ளது என அனுர குமார திசாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.

(மட்டக்களப்பு நிருபர் வலா கிருஷ்ணன்)