Back to Top

 ஹாட்ரிக் வெற்றி - தொடருமா சாதனை பயணம்?

ஹாட்ரிக் வெற்றி - தொடருமா சாதனை பயணம்?

February 9, 2018  09:17 am

Bookmark and Share
கேப்டவுனில் தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிராக புதன்கிழமை நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ஓட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டி தொடரை 5-1 என்றோ அல்லது 6-0 என்றோ இந்தியா வெல்லும் பட்சத்தில், ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்.

இத்தொடரை இந்தியா வெல்ல நன்கு சாத்தியமுள்ள இச்சூழலில், இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள் குறித்த கண்ணோட்டம் மற்றும் வரும் போட்டிகளில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய ஆட்ட யுக்திகள் குறித்து இங்கு பட்டியலிப்பட்டுள்ளது.

இந்திய அணித்தலைவர் விராத் கோலியின் சிறப்பான பேட்டிங்கும், தலைமையும் இந்தியாவின் தொடர் வெற்றிகளில் பெரிதும் உதவியுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் கோலி 2 சதங்கள் அடித்துள்ளார். தென் ஆஃப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் கோலி எஞ்சிய போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி தொடரை 6-0 என்று ஒயிட்வாஷ் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ரோகித் சர்மா, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் இதுவரை நடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. வரும் போட்டிகளில் இவ்வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். அதே வேளையில், கோலி அல்லது தவான் போன்றோர் விரைவாக ஆட்டமிழந்தால் அது இந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்கலாம்.

தென் ஆஃப்ரிக்க அணியின் பார்வையில் கூறவேண்டுமானால், அந்த அணி மூன்று போட்டிகளிலும் இந்திய சுழல் பந்துவீச்சில் பெரிதும் தடுமாறி வருகிறது. சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை கணிக்க முடியாத தென் ஆஃப்ரிக்க துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தொடரை 6-0 என்று வெல்வது, தென் ஆஃப்ரிக்க அணி எப்படி இந்திய சுழல் பந்துவீச்சை சந்திக்கப் போகிறது என்பதை பொறுத்தே அமையும்.

தென் ஆஃப்ரிக்க அணி ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக இழக்காமல் இருக்க ஆம்லா போன்ற வீரர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். டி வில்லியர்ஸ், பாப் டு ப்ளசிஸ் மற்றும் டி காக் போன்ற மூத்த வீரர்களை அந்த அணி பெரிதும் சார்ந்திருந்தது தற்போதைய தோல்விக்கு வழிவகுத்துள்ளது.

ஒருநாள் போட்டி தொடரில் தற்போது இந்தியா வலுவாக உள்ள சூழலில், துடுப்பாட்ட தரவரிசையில் நான்காவதாக களமிறங்கும் ரஹானே அந்த நிலையில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். இது அடுத்தாண்டு நடக்கவுள்ள உலக கிண்ண போட்டியில் இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

Most Viewed