Back to Top

இவ் ஆண்டின் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு தழுவிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஜாஸ் இசைப் பயணம் - 2022

இவ் ஆண்டின் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு தழுவிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஜாஸ் இசைப் பயணம் - 2022

September 16, 2022  01:12 pm

Bookmark and Share
இவ்வாண்டு செப்டம்பர் 26 ஆம் திகதியில் வரும் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம், அலையன்ஸ் ஃபிரான்சைஸ், கோதே-இன்ஸ்டிட்யூட் மற்றும் பிரிடிஸ் கவுன்சில் (British council) ஆகியவை இணைந்து இலங்கையின் மூன்று முக்கிய நகரங்களில் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணத்தை நடத்துகின்றன.

சமாதானமிக்க ஒருங்கிணைந்த சமூகமொன்றை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்படும்  இவ் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணம் பிரதான, பாப் ராக், ஜாஸ் ஃப்யூஷன், ஜாஸ் பாப் மற்றும் லத்தீன் ஜாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். 

இலங்கை மக்களுடன் மொழியியல் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு, கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இச் சுற்றுப் பயணம் கொழும்பில் ஆரம்பித்து, கண்டிக்கு பயணித்து பின் யாழ்ப்பாணத்தில் நிறைவடையும்.

இதன் ஆரம்ப கச்சேரி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் நடைபெறும். இது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைவருக்கும் திறந்திருக்கும் இலவச நிகழ்வாகும். இந்தக் கச்சேரியைத் தொடர்ந்து கண்டியில் செப்டம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு ஜாஸ் மாலை நிகழ்ச்சிகள், Slightly Chilled Lounge Bar and Restaurant இல் நடைபெறும். இறுதிக் கச்சேரி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் செப்டம்பர் 28 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணி முதல் நடைபெறும்.

இந்த நிகழ்வில் பாடகர், கிடார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் எலியன் அம்ஹெர்ட் மற்றும் Bass இசைக் கலைஞரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான அமண்டா ருஸ்ஸா ஆகியோரின் நிகழ்ச்சிகள் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், போர்த்துக்கல் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறும்.

சுவிட்ஸர்லாந்தில் பிறந்த எலியன் அமெர்ட் நியூயோர்க்கில் வசிப்பதோடு, நகரின் புலமைமிகு பல்கலாச்சார உந்துசக்தியின் தாக்கமானது அவரால் சொந்தமாக உருவாக்கப்பட்ட உயிரோட்டமுள்ள, உத்வேகம் மிக்க ஆபிரிக்க, பிரேசிலிய, லத்தீன் இசை பின்புலங்களைக் கொண்ட இசைக்கோர்வைகளினது தனித்துவமான ஒலியமைப்பில் புலப்படுகிறது. ஒரு திறமையான இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், ஜாஸ் மற்றும் தற்கால இசைக்கான த நியூ ஸ்கூல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவருமான எலியன் நியூயோர்க்கின் பிரதானமான மனமகிழ் மன்றங்களில் முதன்மைக் கலைஞராகவோ, சிறப்புத்தோற்றத்திலோ நிகழ்த்துகைகளை மேற்கொள்கிறார். அத்துடன் வட-தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளதோடு, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியன்மார், மலேசியா, நேபாளம் மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளில் சர்வதேச விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.  அவர் பல்வேறு NYC இசைக்குழுக்களில் கிட்டார் வாசிப்பதோடு, மார்க்கஸ் ஸ்ட்ரிக்லண்ட், பஷிரி ஜான்சன், பில் வேர், ஹெகர் பென் ஆரி, ரெண்டி பிரெக்கர் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.

சிலி நாட்டு தாய்க்கும் இத்தாலிய தந்தைக்கு பிரேசிலின் சாவோ பாலோவில் பிறந்த அமண்டா ருஸ்ஸா, இசை ஆர்வம் கொண்டதோர் வீட்டில் வளர்ந்தார். அமண்டா இளம் வயதிலேயே Bass இசைக்க ஆரம்பித்ததோடு தொழில்சார் இசைத் துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். பிரேசிலில், கிராமி விருது வென்ற மூகி கனாசியோ, மேஸ்ட்ரோ ஜோபம், ஜப்பானிய சோனி இசை நிறுவனத்தின் ஓஸ்னி மெல்லோ உள்ளிட்ட புகழ்பெற்ற பிரேசிலிய தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுடனும் அவர் பணியாற்றினார். இவர் தற்போது நியூயார்க்கில் வசிக்கிறார். பலவிதமான பாணிகளில் சரளமாக இசைக்கக் கூடிய அமண்டா, போர்த்துகீச, ஸ்பானிய, இத்தாலிய மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சரளமாக பேசுகிறார்.