Back to Top

சமையல் எரிவாயு கசிவு : உணவகத்தின் உரிமையாளர் காயம்

சமையல் எரிவாயு கசிவு : உணவகத்தின் உரிமையாளர் காயம்

January 25, 2023  05:02 pm

Bookmark and Share
புத்தளம் - பாலாவி நகரில் உள்ள சிறிய உணவகம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் அந்தக் உணவகத்தின் உரிமையாளர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இன்று (25) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோசை, உளுந்து வடை விற்பனை செய்யும் குறித்த உணவகத்தின் உரிமையாளர் வழமை போன்று தனது தோசைக் கடை உணவகத்தில் காலை நேர உணவுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, தோசை தயாரிப்பதற்காக தயாராகிய போது, கடையிலிருந்த எரிவாயு முடிந்தமையினால் மற்றொரு சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்து மீதி வேலையை செய்வதற்காக ஆயத்தமான போது புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் தீ பற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என அந்தக் கடையின் உரிமையாளர் கூறினார்.

இதன்போது உணவகத்தின் உரிமையாளர் சிறிய எரிகாயங்களுக்கு உள்ளானதுடன், கடையின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியும் வெடித்துச் சிதறியுள்ளது.

கடையின் முன்பகுதியும் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு எரிவாயு சிலிண்டர் திடீரென கசிந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னரும் புத்தளம் மாவட்டத்தில் பல உணவகங்களிலும், வீடுகளிலும் இவ்வாறு சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-