Back to Top

யாழில் பயங்கரம்! -  கண்ட இடத்தில் சுட தயாராகும் பொலிஸார்?

யாழில் பயங்கரம்! - கண்ட இடத்தில் சுட தயாராகும் பொலிஸார்?

January 25, 2023  06:50 pm

Bookmark and Share
இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாவது;

வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட கனி என்பவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று முற்பகல் சிறையிலிருந்து பிணையில் வெளி வந்துள்ளார்.

அவர் காரில் வருவதாக அறிந்த ஜெகன் கும்பல், ஆவா கும்பலுடன் இணைந்து இன்று முற்பகல் சுன்னாகத்தில் நடுவீதியில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது.

காரை தீ வைத்து எரிக்க வன்முறைக் கும்பல் பெற்றோலையும் எடுத்து வந்துள்ளது.

காரை நடு வீதியில் வாகனத்தினால் மோதி விபத்துக்குள்ளாகிய கும்பல் அதில் பயணித்தவர்களை தாக்கியுள்ளது. எனினும் கனி என்பவர் அந்தக் காரில் இல்லை என அறிந்ததும் வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.

இன்றைய சம்பவத்தில் நிசா விக்டர் என்பவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இன்றைய தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் முகத்தில் கறுப்புத் துணியணிந்து வந்துள்ளனர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கனி என்பவர் தாயாரின் இறுதிச் சடங்குக்கு வந்தால் கொலை செய்வோம் என்று அவரது சகோதரிக்கு நேற்றிரவு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரினால் மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டவர் மோதி விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்து என்ற ரீதியில் வழக்கை திசைமாற்ற ஜெகன் கும்பல் எடுத்த நடவடிக்கை என பொலிஸ் மட்டத்தில் பேசப்படுகிறது.

இதேவேளை, வன்முறைக் கும்பல்களின் அடாவடி அதிகரித்துள்ளதால் பொலிஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வன்முறையில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சூடு நடத்துவதற்கான கட்டளையைப் பெறுவது தொடர்பில் பொலிஸ் உயர்மட்டம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-யாழ். நிருபர் பிரதீபன்-