Back to Top

முதல்வர் பிரகடன வர்த்தமானி வழக்கு!

முதல்வர் பிரகடன வர்த்தமானி வழக்கு!

February 6, 2023  09:21 pm

Bookmark and Share
யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ். மாநகர சபையின் முதல்வராக இ. ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தொடுத்த மனு மீதான விசாரணை இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு தவணையிட்டார்.

குறித்த வழக்கில் யாழ். மாநகர முதல்வர், யாழ். மாநகர ஆணையாளர், சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கே. சயந்தன் ஆகியோரும் மனுதாரர் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி கு. குருபரன், வி. மணிவண்ணன், வி. திருக்குமரன் ஆகியோரும் ஆஜராகினர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-