Back to Top

தொழிற்சங்க போராட்டம் - ரயில் சேவைகள் இரத்து -  மக்கள் அவதி!

தொழிற்சங்க போராட்டம் - ரயில் சேவைகள் இரத்து - மக்கள் அவதி!

March 15, 2023  07:36 am

Bookmark and Share
பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று 14 ஆம் திகதி இரவு புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்திற்கான இரண்டு இரவு நேர புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனை அடுத்து புகையிரதத்தில் பயணிப்பதற்காக ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் கொழும்பு, காலி, கம்பஹா உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரை செய்த யாத்திரியர்கள் மற்றும் கொழும்பு நோக்கி புறப்பட வந்த புகையிரத பயணிகள் புகையிரதம் இரத்தச் செய்யப்பட்டதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது பொது மக்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்கூட்டி அறிவித்திருந்தால் தாங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பொது மக்களுக்கு அதிர்ப்த்தி ஏற்படுவதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எவ்வாறாயினும் பயணிகளின் நன்மை கருதி இரவு 12 மணிக்கு பின் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

தொழிற்சங்க போராட்டம் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்து புகையிரம் ஒன்றும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த இரவு நேர இரண்டு புகையிரத சேவைகளுகம் இரத்தச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-