Back to Top

குற்றவியல் சட்டங்களில் திருத்தம்!

குற்றவியல் சட்டங்களில் திருத்தம்!

March 15, 2023  09:27 am

Bookmark and Share
குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக மாநில முதல்வா்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் விசாரணை முறை சட்டம் - 1973, இந்திய ஆதாரச் சட்டம் - 1872 உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்க தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதே வேளையில், மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் மற்றும் நிா்வாகிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், இந்திய பாா் கவுன்சில், மாநிலங்களின் பாா் கவுன்சில்கள், பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், எம்.பி.க்கள் ஆகியோரிடமிருந்து குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தங்களது கருத்துகளை அளிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு பெற்ற பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் மூலம் விரிவான சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இத்தகைய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது நீண்ட காலசெயல்முறை என்பதால், எவ்வித கால அளவையும் நிா்ணயம் செய்ய இயலாது என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.