Back to Top

இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டம்!

March 15, 2023  02:47 pm

Bookmark and Share
அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக வேலை செய்யும் மக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து இன்று புதன்கிழமை (15) மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இதன்போது காந்தி பூங்கா வளாகத்திலிருந்து நடைபவனியாக சென்று மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"எடுத்த காசுக்கு வங்கி வட்டி மேலும் மேலும் அதிகமாச்சு", ´´சம்பளமும் காணாது வரி செலுத்தப் போதாது", "வங்கித் திருடன் அரசனானான் நாட்டைத் தின்று ஏப்பம் விட்டான்", "நாட்டைச் சுரண்டுவோர் அவனியிலே நாட்டை உயர்த்துவோர் வீதியிலே", "ஊழல் வாதிகளை விரட்டிடுவோம் நாட்டைச் செழிப்பாய் ஆக்கிடுவோம்" போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஒன்று திரண்டு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

´´அச்சுறுத்தலை விடுத்து சுபோதினி அறிக்கையின் பிரகாரம் சம்பள முரண்பாட்டை நீக்கு", "இடைக்காலக் கொடுப்பனவாக 20,000 ரூபாவை உடன் வழங்கு", "ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவேனா ஆசிரியர்களின் பதவியுயர்வு மற்றும் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு கொடு", போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.

இதில் பெருமளவிலான ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-