
உலகின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில்...
March 16, 2023 07:36 am
ஆசியாவின் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 12 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்ஃயூஏர் எனப்படும் ஆய்வு நிறுவனம் உலகின் மிகவும் மாசடைந்த நகரங்கள் குறித்த ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் மிகவும் மாசடைந்த முன்னணி 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்னும் அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.
உலகில் உள்ள 131 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை அந்நிறுவனம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்காசிய நகரங்களில் காற்று தர குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி நகரம் அதிகம் மாசடைந்த நகரமாக அறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆரோக்கியமான நகரத்திற்கான சராசரி குறியீடுகளைக் காட்டிலும் இந்தப் பட்டியலில் உள்ள 60 சதவிகிதத்திற்கும் மேலான நகரங்கள் மாசடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் காற்று மாசடைந்த 8 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ள நிலையில் பதிவான மொத்தம் 50 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 39 நகரங்கள் உள்ளன என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.