Back to Top

தகவலறியும் சட்டம் அரச ஊழியருக்கு பொறியாக கருதினாலும் நல்லாட்சிக்கு அத்தியாவசியம்

தகவலறியும் சட்டம் அரச ஊழியருக்கு பொறியாக கருதினாலும் நல்லாட்சிக்கு அத்தியாவசியம்

December 20, 2017  09:13 pm

Bookmark and Share
தகவலறியும் உரிமைச்சட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக கருதப்பட்டாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக அத்தியாவசியமாக உள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களுக்காக மட்டக்களப்பில் மூன்றுநாள் பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது ஒரு முக்கியமானதொரு விடயம். நாம் இன்னமும் தகவல் அறியும் உரிமைக்கு முக்கியத்துவம் அழித்துச் செயற்படாத நிலை இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

12 ஆம் இலக்க 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் படி இலங்கையில் முக்கியமானதொரு சட்டமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

உண்மையில் நல்லாட்சியில் மக்களுடைய உரிமை எனப் பாதுகாக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக பல்வேறு நல்ல அம்சங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டுள்ளது.

பொதுமக்கள் அவர்களுக்குத் தேவையான விடயங்களை அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாக இருக்கிறது.

அதேவேளை எங்களுடைய நிர்வாகத்தில் இருக்கின்ற சில நல்ல பண்புகளை மேம்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டம் வகை செய்யும் என நினைக்கிறேன்.

எமது நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும் உலகின் ஏனைய நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இதனுடைய பொறி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக ஒருபுறம் நாங்கள் பார்த்தாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வெண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் மூன்றுநாள் பயிற்சி உங்களுக்கு நல்ல விடயங்கள் பலவற்றைக் கற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதனை உங்களுடைய அலுவலகங்களில் செயற்படுத்துவது முக்கியமானது. இச் சட்டம் ஊடான செயற்பாடு எதிர்காலத்தில் செயற்திறனாக இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)